தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் வசந்த். கடந்த 1990ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘கேளடி கண்மணி’ படம் சூப்பர் ஹிட்டடித்தது. மறைந்த பாடகர் பாலசுப்ரமணியம் நடிப்பில் வெளியான இப்படம் 285 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து இவர் இயக்கிய ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே, மூன்று பேர் மூன்று காதல் உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. தொடர்ந்து வசந்த் படத்திற்கென தனி எதிர்பார்ப்பு உருவாக தொடங்கியது.
வசந்த் தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் பாயசம் என்ற பகுதியை இயக்கியுள்ளார். அதில் ரோகினி, டெல்லி கணேஷ், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் வசந்த் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற அந்தாலஜி திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது அந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகை பார்வதி, லக்ஷ்மிகுமார் சந்திரமௌலி, கருணாகரன், சுந்தர் ராமு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இசையில் உருவான இப்படத்தை வசந்தே தயாரித்துள்ளார். இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது சோனி லைவ் ஓடிடித்தளத்தில் வெளியாக உள்ளது.