Viduthalai 2 Movie Review: இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் விடுதலை 2 வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவான இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
கதை கரு
முதல் பாகத்தில் விஜய் சேதுபதியை பிடிக்க சூரி உதவுவார். காவல் துறையிடம் மாட்டிக் கொள்ளும் பெருமாள் வாத்தியாரின் கதையை சூரி தெரிந்து கொள்வது தான் இரண்டாம் பாகத்தின் கதை.
பள்ளி வாத்தியாராக இருக்கும் விஜய் சேதுபதி கிஷோருடன் இணைந்து ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக மக்களுக்காக குரல் கொடுக்கிறார். அங்கு தொழிற்சாலை முதலாளி மக்களின் உழைப்பை சுரண்டி ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்.
அவர்களுக்காக விஜய் சேதுபதி போராடும் நிலையில் முதலாளியின் மகள் மஞ்சுவாரியரும் மக்களுக்காக குரல் கொடுக்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.
எதிர்ப்புகளைத் தாண்டி இவர்களுடைய திருமணமும் நடக்கிறது. அதன் பிறகு விஜய் சேதுபதி முதலாளி வர்க்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்கள் படையை உருவாக்குகிறார்.
இந்தப் போராட்டத்தில் பல அப்பாவி மக்கள் பலியாகின்றனர். அதிலிருந்து தப்பிக்கும் வாத்தியாருக்கு ஆதரவாக சூரி நின்றாரா? பெருமாள் வாத்தியாரின் புரட்சி என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை.
நிறை குறைகள்
முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்தில் சூரிக்கு பெரிய அளவில் வேலை இல்லை. விஜய் சேதுபதி தான் முழு படத்தையும் ஆக்கிரமித்துள்ளார்.
மஞ்சு வாரியருடன் காதல், ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான புரட்சி என வழக்கம் போல அவருடைய நடிப்பு அசத்தலாக இருக்கிறது. அவருக்கு இணையாக மஞ்சு வாரியரும் கலக்கி இருக்கிறார்.
அடுத்ததாக சேத்தனின் கதாபாத்திரம் எரிச்சல் மூட்டுகிறது. படம் பார்ப்பவர்கள் திரையை கிழித்துக்கொண்டு போய் அவரை திட்டலாமா என்னும் அளவுக்கு அவருடைய கேரக்டர் கோபத்தை வரவழைக்கிறது.
அதேபோல் ராஜீவ் மேனன் கென் கருணாஸ், கிஷோர் ஆகியோரும் தங்களுக்கான கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். இந்தப் பெருமை வெற்றிமாறனை தான் சேரும்.
அழுத்தமான கதையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் சரியாக நகர்த்தி சென்றுள்ளார். அதற்கு பலமாக இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் இதமளிக்கிறது.
ஆக மொத்தம் அதிகார வர்க்கத்திற்கு எதிராக மக்களின் குரலை ஓங்கி சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன். வன்முறை இருந்தாலும் படத்தை தாராளமாக பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5