தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றன. அதுமட்டுமல்லாமல் பல விருதுகளையும் குவித்தது. தமிழ் சினிமாவை அடுத்த தரத்திற்கு எடுத்து செல்லும் அளவிற்கு வெற்றிமாறனின் படைப்புகள் இருக்கும்.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை, அசுரன் உள்ளிட்ட படங்கள் லாக்கப் மற்றும் வெக்கை ஆகிய நாவல்களையே தழுவி எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படமும் எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவியே எடுக்கப்பட்டு வருகிறதாம்.
மேலும் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படமும் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுத்து வருகிறார். என்னதான் நாவலை தழுவி படங்களை இயக்கினாலும் அதை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி வழங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
அந்த விஷயத்தில் வெற்றிமாறன் கில்லாடி தான். இவரது படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கும். தற்போது வெற்றிமாறன் மேலும் ஒரு நாவலை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான கோட்டா நீலிமா எழுதி கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நாவல் தான் ஷுஸ் ஆஃப் தி டெட். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு ஏழை விவசாயியின், விதவை மனைவி நஷ்டஈடு கேட்டு போராடுகிறார். அரசியல் சக்திகள் தொடர்ந்து அவரது கோரிக்கையை நிராகரிக்கின்றன.
இறந்து போன விவசாயியின் தம்பி எப்படி சட்டப் போராட்டத்தின் மூலம் நீதி பெற்று தருகிறார் என்பது தான் இந்த நாவலின் கதை. தற்போது இந்த நாவலை படமாக்கும் உரிமையை வெற்றிமாறன் வாங்கியுள்ளாராம். இதுமட்டுமின்றி இந்த நாவலின் கதையை நடிகர் விஜய்யிடம் கூறி அவரின் சம்மதத்தையும் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக நடிகர் விஜய் சமூக கருத்து நிறைந்த படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எனவே விஜய் இப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பனும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.