சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

வட சென்னை போல வெற்றிமாறன் போடும் பக்கா பிளான்.. ஆனா எதுவுமே நம்புற மாதிரி இல்லை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் விடுதலை படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

கடந்த மூன்று வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த சிறுமலை கிராமத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து விஜய் சேதுபதியின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் நடிகர் சூரியின் காட்சிகளும் இப்படத்தில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளரிடம் வெற்றிமாறன் காண்பித்துள்ளார். அதைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுமாறு வெற்றிமாறனிடம் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் இத்திரைப்படத்தில் வெற்றிமாறன் எடுத்த அனைத்து காட்சிகளும் நன்றாக அமைந்துள்ளதாம். எனவே எந்த காட்சிகளையும் ஒதுக்கி விடாமல், விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலை பாகம்-1 ரிலீசுக்கு பின் அடுத்த மூன்று மாதத்திலேயே விடுதலை 2 ரிலீஸ் ஆகும் என்று வெற்றிமாறன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படாமல் உள்ள நிலையில் விடுதலை திரைப்படத்தின் பாகம்-2 எப்படி வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தற்போது வெற்றிமாறன் கூடிய விரைவில் விடுதலை திரைப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதற்காக மும்முரமாக இருக்கிறார். அதன் பின்னர் வட சென்னை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் வெற்றிமாறன் தொடங்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News