தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்த இப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இருப்பினும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. அதே போல் தற்போது உருவாகிவரும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக விஜய் ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு படப்பிடிப்பாக இருந்தால் கூட ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் விடுமுறை எடுத்துக் கொள்வார். இதுதான் அவரது பலவருட கொள்கையாக இருந்தது.
ஆனால் தற்போது பூஜா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருப்பதால் அவருக்காக தனது கொள்கையை தளர்த்திக் கொண்ட விஜய், ஞாயிற்றுக்கிழமையும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.