இன்றைய தேதியில் கோலிவுட்டில் வசூல் மன்னன் என்றாலே அது தளபதி விஜய் தான். தற்போது வரை தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் நடிகர் விஜய்யின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வேறு எந்த நடிகரின் படங்களுக்கும் கிடைப்பதில்லை. அதனாலோ என்னவோ சமீப காலமாகவே விஜய் படங்களை கைப்பற்றுவதில் அதிக போட்டி நிலவி வருகிறது.
விஜய் படங்களுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் நல்ல டிமாண்ட் தான் நிலவி வருகிறது. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாராக தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அந்த அளவிற்கு விஜய்க்கு மார்க்கெட் உள்ளது. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பே தொடங்கவில்லை. ஆனால் அதற்குள்ளாக படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறதாம்.
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி தளபதி 66 படத்தின் சாட்டிலைட் மற்றும் தியேட்டர் வெளியீட்டிற்கு பின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமை ஆகியவற்றை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொர்க் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டுமே சுமார் 70 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் பிகில் படத்தின் சாட்டிலைட் உரிமை 50 கோடிக்கு விற்பனையான நிலையில், தளபதி 66 படத்தின் சாட்டிலைட் உரிமை சுமார் 70 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது. சாட்டிலைட் உரிமை மட்டுமே 70 கோடி ரூபாய் என்றால் டிஜிட்டல் உரிமையை சேர்த்தால் எப்படியும் 100 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.