தமிழ் சினிமாவின் இரு சிகரங்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. ஆனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. அந்த படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் சாதாரண நடிகர்கள். இன்று அசாதாரணமானவர்கள். இன்றைய சூழலில் இருவரில் ஒருவரின் டேட் வாங்குவதே சவாலானது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன் இருவரின் டேட் வாங்கி, அதை படமாக்கிய பெருமை ஸ்ரீமாசானி அம்மன் மூவிஸிற்கு உண்டு.
விஜய் அஜித் என்ற இரு துருவங்கள் ஒரு துருவமாக இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தது எப்படி சாத்தியமானது என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சௌந்தரபாண்டியன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ராஜாவின் பார்வையிலேயே கதை ரெடியானதும் யாரை போடலாம் என யோசித்தோம். அப்போது ரசிகன் 100வது நாள் ஓடிக்கொண்டிருந்தது. தேவா சூட்டிங் ஸ்பாட் சென்று எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதை சொன்னோம். விஜயிடம் கதை சொல்ல சொன்னார். அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். அவரும் பிடித்துவிட்டது என்றார்.
கதைப்படி இருவர் வேண்டும். என் தம்பிக்கு அஜித் பழக்கம். எனக்கும் நல்ல பிரண்ட். சொன்னதுமே நடிக்கிறேன்னு சொல்லிட்டார். இருவருமே எந்த நிபந்தனையும், கோரிக்கையும் வைக்கல. சூட்டிங் ஆரம்பிச்சுட்டோம்.
படத்தோட மொத்த செலவே ரொம்ப கம்மி தான். அதுல அவங்களுக்கு என்ன பெருசா சம்பளம் கொடுத்துட போறோம். ஆனால் விஜய் வெளி தயாரிப்பாளரிடம் நடித்த முதல் படம் அது. ரொம்ப கம்மியான சம்பளம் தான் வாங்குனாரு. அஜித் அந்த சம்பளத்தை கூட வாங்கல.
நான் திரும்பி பார்ப்பதற்குள் அவர்கள் எங்கேயோ பறந்துட்டாங்க. அடுத்த15 ஆண்டுக்கு பிறகு தான் அஜித்தை பார்த்தேன். இனி இரண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வைக்க முடியாது. இரண்டும் இரு இமயங்கள். ஒருவர் கால்ஷூட் கிடைப்பதே கஷ்டமானது” என கூறியுள்ளார்.
விஜய்-அஜித் இருவருமே உண்மையில் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இது நடக்குமா என்பது சந்தேகமே.