இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 17ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் ‘கோடியில் ஒருவன்’. இதில் நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படத்தை ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில், கொரோனா 2ம் அலைக்குப் பின் தியேட்டரில் வெளியான படங்களில் ‘கோடியில் ஒருவன்’ முதலாவது வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக மூடியிருந்த திரையரங்கம் கடந்த 9ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கி வருகின்றது.
பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் தீபாவளியை குறிவைத்துள்ளதால் ஒருசில சிறிய படங்கள் மட்டுமே இந்தமாதம் வெளியானது. இதில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்தசாமி, கங்கனா ரனாவத் நடிப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட, பான் இந்தியா படமாக உருவாகிய தலைவி தியேட்டரில் வெளியானது.
இதைத்த்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள ஃபிரண்ட்ஷிப், விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், விஜய் ஆண்டனியின் நடிப்பில் கோடியில் ஒருவன் என மிக சில படங்களே தியேட்டரில் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் சில பிறமொழி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இதில் ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் சேர்த்து 4.90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் படத்திற்குப்பின் விஜய் ஆண்டனியின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.