தேசிய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த விஜய்.. மீண்டும் விவாதமான நீட் தேர்வு

Vijay: இந்த வருடம் பொது தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியருக்கு விஜய் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். அதன் முதல் கட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது கட்ட விழா இன்று நடைபெற்றது.

இதில் பலரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் விஜய் நீட் தேர்வு குறித்து தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முன் வைத்தது தான். அதிலும் ஒன்றிய அரசை எதிர்த்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் இப்போது விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல வருடங்களாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அவற்றின் குரலாக விஜய் இன்று தன்னுடைய கருத்தை மட்டும் அல்லாமல் நீட்டின் அவலம், அதற்கான தீர்வு ஆகியவற்றைப் பற்றியும் அனல் பறக்க பேசியிருந்தார்.

அதன்படி இந்த தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கான சுதந்திரத்தை ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதில் சிக்கல் இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என ஒரு ஐடியாவையும் கொடுத்திருந்தார்.

விஜய்யால் விவாதமான நீட் தேர்வு

இதுதான் இப்போது விவாதமாக மாறி இருக்கிறது. ஒரு சிலர் விஜய்யின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு வரவேற்பும் கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிராகவும் கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால் விஜய் தன்னுடைய தெளிவான கருத்தை முன் வைத்தது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அது மட்டும் இன்றி தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் மீடியாக்களும் இந்த செய்தியை வெளியிட்டு விஜய்யை பாராட்டி வருகின்றன.

மேலும் விஜய்யின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்பதையும் இந்த ஒரு விஷயம் தெளிவுபடுத்தி இருக்கிறது. தேர்தலை சந்திப்பதற்கு முன்பாகவே மக்கள் மனதில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்.

அதனாலேயே தன்னுடைய முதல் அடியை மாணவர்களை வைத்து தொடங்கி இருக்கிறார். அதுவும் நங்கூரம் போல் அமைந்துள்ளது. ஆக மொத்தம் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தேசிய அளவில் கவனம் பெறும் விஜய்

Next Story

- Advertisement -