தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரை உலகில் நடிகர்களின் சம்பளம் எப்போதுமே ஒரு பேசுபொருளாக உள்ளது. அது மட்டுமின்றி சம்பளம் வழங்குவதில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு பார்க்க படுவதாக சமீப காலமாக அனைத்து நடிகைகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் நடிகர்களுக்கே அதிகமான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது அதிக பட்ச சம்பளம் பெறுபவர் என்றால் அது நடிகர் ரஜினி மட்டுமே. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்காக சுமார் 108 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இதுவரை எந்த நடிகரும் 100 கோடிக்கு மேல் தங்களது சம்பளத்தை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது இந்த வரிசையில் நடிகர் விஜய் இணைந்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விஜய்யின் 66வது படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்முறை முதல் முறையாக நடிகர் விஜய் தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். முன்னதாக மாஸ்டர் படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய், தற்போது பைலிங்குவல் படம் என்பதால் தமிழுக்கு 80 கோடி, தெலுங்கு மார்க்கெட்டிற்கு 40 கோடி என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளத்திற்கு இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இச்செய்தி கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் அஜித் வலிமை படத்திற்காக 50 கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தமாகி இருந்த நிலையில் படப்பிடிப்பு தாமதமானதால் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி இருந்தார். ஆனால் நடிகர் விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளது தற்போது கோலிவுட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.