இந்திய சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு எப்படி தனியாக சங்கம் உள்ளதோ அதேபோன்று ஒளிப்பதிவாளர்களுக்கென தனியாக ஒரு அமைப்பு உள்ளது. ஒவ்வொரு இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்களும் இந்த அமைப்பில் உறுப்பினராவதை தங்களது கௌரவமாகவும், வாழ்நாள் கனவாகவும் கொண்டுள்ளனர்.
இந்த அமைப்பின் பெயர் ISC (Indian Society of Cinematographers) ஆகும். இந்த அமைப்பானது கடந்த 1995ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. உலக ஒளிப்பதிவின் அழகியலை மறுவரையறை செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த அமைப்பின் உருவாக்க உறுப்பினர்களாக இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களான அணில் மேத்தா, ராமசந்திர பாபு, சன்னி ஜோஸப், பி.சி. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், வேணு, ரவி. கே. சந்திரன், மது அம்பத் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 100க்கும் குறைந்த நபர்களை மட்டுமே இந்த அமைப்பு கொண்டுள்ளது.
இதுமட்டுமின்றி இந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு 18 விதிகள் உள்ளது. அதில் மிக முக்கியமான விதி குறைந்தது ஏழு வருடம் ஒளிப்பதிவாளராக தொடர்ந்து ஒய்வின்றி பணியாற்றி இருக்க வேண்டும். அதோடு கற்பனைத்திறனும், புதுமையான உத்திகளும், உயர் தொழில்நுட்ப திறனும் கொண்டு ஒளிப்பதிவு செய்து இருக்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது இந்த அமைப்பில், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் வாழ்நாள் உறுப்பினராகியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவின் உதவியாளராக, இயக்குனர் விஷ்னுவர்தன் இயக்கி அஜித் நடித்த பில்லா படத்தில் இரண்டாவது கேமராமேனாக பணியாற்றியவர்.
இதனையடுத்து அட்லி இயக்கத்தில் ராஜாராணி படம் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தளபதி விஜய்யுடன் கத்தி, தெறி ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். மேலும் நானும் ரவுடி தான், ஹீரோ, இரும்புத்திரை போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.