திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிவகார்த்திகேயன் வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் சேதுபதி.. லேட்டஸ்ட் அப்டேட்

கோலிவுட்டில் நடிக்க வந்த சில காலத்திலேயே உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். இவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படாத நடிகர்களே இல்லை. ஏனென்றால் கால்ஷீட் டைரி நிரம்பி வழியும் அளவிற்கு அவ்வளவு வாய்ப்புகள் இவரை தேடி குவிந்த வண்ணம் இருக்கும். அதுமட்டுமல்ல ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் வெளியாகும்.

இதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பது தான். எந்த ஒரு ஹீரோவும் இந்த அளவிற்கு இறங்கி நடிக்க மாட்டார். ஆனால் அங்கு தான் விஜய் சேதுபதி தவறும் செய்துள்ளார். அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் கதையை சரியாக தேர்வு செய்யாமல் சமீபமாகவே தொடர் தோல்வி படங்களை வழங்கி வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதி கைவசம் விக்ரம், கடைசி விவசாயி, மாமனிதன், இடம் பொருள் ஏவல், விடுதலை, காத்து வாக்குல ரெண்டு காதல், மைக்கேல், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில் ஒரு சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 46வது படமும் விரைவில் வெளியாக உள்ளதாம்.

அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராமுடன் விஜய் சேதுபதி முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள புதிய படம் தான் விஜய் சேதுபதியின் 46வது படமாகும். இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற பிரபல மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார். இப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் புகழும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை அனுகீர்த்தி வாஸ் அவரது படப்பிடிப்பு பணிகளை முடித்து கொடுத்துவிட்டாராம். தற்போது அனுகீர்த்தி வாஸ் அவரது டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். பொன்ராம் படம் என்றாலே கிராமத்தை மையமாக வைத்து காமெடி காதல் ஆக்சன் கலந்த ஒரு குடும்ப படமாகவே இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News