கொரோனா நோய்த்தொற்று பொதுமக்கள் பலரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. பலரின் தொழில் முடங்கியது. இது திரைகலைஞர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. கொரோனாவால் திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் நடிகர்கள் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் பல படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. அந்த சமயத்தில் தான் பல இயக்குனர்கள் ஆந்தாலஜி என்ற வகை படத்தை இயக்க தொடங்கினார்கள். அந்த வரிசையில் புத்தம் புதிய காலை, குட்டி லவ் ஸ்டோரிஸ் மற்றும் நவரசா என அடுக்கடுக்காக பல படங்கள் வெளியாகின. ஆனால் இவற்றில் எதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இருப்பினும் தற்போது தமிழில் ஆந்தாலஜி படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கசடதபற என்ற ஆந்தாலஜி படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு ஆந்தாலஜி படம் உருவாக உள்ளதாம்.
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தமிழில் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். அதில் ஒன்று ஆரண்ய காண்டம் மற்றொன்று சூப்பர் டீலக்ஸ். இந்த இரண்டு படங்களுமே தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இவ்விரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் குவித்தது. இதன் மூலம் இவர் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.
இந்நிலையில் இவரும் ஆந்தாலஜி படத்தை கையில் எடுத்துள்ளார். இதில், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோர் படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் கதைக்களம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.