தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் வெவ்வேறு மொழிகளில் அதிக அளவில் ரீமேக்காகி வருகின்றன. தற்போது அந்த வரிசையில் ஓ மை கடவுளே படமும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், லாபத்தையும் அள்ளியது.
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நண்பர்களாக இருக்கும் இருவர் கணவன் மனைவியாக மாறினால் அவர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பதை ஜாலியான காதல் கல்யாண கதையாக இயக்குனர் எடுத்திருந்தார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் .
தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தெலுங்கில் பிவிபி சினிமாஸும், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் இணைந்து ரீமேக் செய்ய உள்ளனர். இதில் விஷ்வாக் சென்னும், மித்திலா பார்கரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் விஜய் சேதுபதி நடித்த கௌரவ வேடத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாக உள்ளது . முன்னணி நடிகரான அவர் இதற்கு முன் அனுஷ்காவின் சரித்திரப் படமான ருத்ரமாதேவியில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிவிபி சினிமாவும், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் கேட்பதால் அல்லு அர்ஜுன் கௌரவ வேடத்தை ஏற்றுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரம் தகவல் தெரிவித்து வருகிறது.