தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அவர் சினிமாவை தொடர்ந்து அரசியல் கட்சி ஒன்றயும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாநகர காவல். ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் 150வது படம் தான் இது. இந்தப் படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலையொட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த நபர் இயக்குநர் தியாகராஜன் என்று தெரியவந்தது. பிறகு அவருடைய குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தியாகராஜனுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் தியாகராஜன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் தியாகராஜனின் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
தனது திரை பயணத்தை தொடங்கிய ஏவிஎம் ஸ்டுடியோ வாசலிலேயே அவர் உயிரிழந்திருப்பது மக்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகில் பிரபல இயக்குனராக இருந்த தியாகராஜன் சாலையோரத்தில் இறந்து கிடந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.