தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமான இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது சார்பட்டா பரம்பரை படம் மூலமாக முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ஆர்யா நடிப்பில் வெளியான இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல நடிகர்களும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை ஆக்சன் கலந்த படங்களை மட்டுமே இயக்கி வந்த ரஞ்சித் தற்போது முதல் முறையாக முழுநீள காதல் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின்னர் விக்ரம் நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்குவார் என கூறப்படுகிறது.
தற்போது நடிகர் விக்ரமும் கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். எனவே தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பின்னரே நடிகர் விக்ரம், ரஞ்சித் இயக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டக்கத்தி, காலா, கபாலி என தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கிவந்த ரஞ்சித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கியுள்ளது. அதேபோல் விக்ரமும் தனது படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணையும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.