சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ரஜினியுடன் நேரடியாக மோத முடிவு.. அஜித், விஜய் விட்டாலும் இவர் விட மாட்டார் போலயே

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். தீபாவளி வந்தாலே தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் வாங்குவதெல்லாம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளிக்கு ஏராளமான படங்கள் வெளியாக உள்ளன. கொரோனா தொற்றுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், அனைத்து பெரிய நடிகர்களின் படங்களும் வரிசையாக வெளியாக உள்ளன. அந்த வரிசையில் தற்போது நடிகர் விக்ரமும் இணைந்துள்ளார்.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் மகான். இப்படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மகான் படம் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mahan-movie-first-look-poster
mahan-movie-first-look-poster

ஏற்கனவே தீபாவளி அன்று நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வா டீல் படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ரேசில் நடிகர் விக்ரமும் இணைந்துள்ளதால், தீபாவளி சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News