கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் பிரபல நடிகர் கலாபவன் மணி. சிறுவயதில் இருந்தே நடிப்பு, இசை மற்றும் மிமிக்ரி மீது அதிக ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், இவரது கருப்பான தோற்றம் மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக இவர் ஆசை தடைபட்டது. இருப்பனும் மனம் தளராமல் முயற்சி செய்தபோதுதான் கலாபவன் என்ற கூத்துப்பட்டறை இவருக்கு வாய்ப்பளித்தது.
அந்த வாய்ப்பை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்ட மணி அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் கலாபவன் மணியாக கோலோச்சினார். இருப்பினும் இந்த வளர்ச்சி ஒரே நாளில் கிடைத்து விடவில்லை. இதற்காக அவர்பட்ட வலிகளும், அவமானங்களும் அதிகம்.
ஆட்டோ ஓட்டுனராக தனது வாழ்க்கையை தொடங்கிய கலாபவன் மணி, 1995ஆம் ஆண்டு வெளியான அக்ஷரம் என்னும் மலையாளப் படத்தில் ஆட்டோ ஓட்டுனராகவே அறிமுகமானார். மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் ஜெமினி படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தேஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த கலாபவன் மணியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மறக்க முடியாத நாளாக மாறியது. அந்த நாள் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற கலாபவன் மணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அவரது இறப்பில் சந்தேகம் எழுந்த நிலையில், பிரேத பரிசோதனையில் மணியின் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததும் தெரியவந்தது. இறுதியில் கலாபவன் மணி, கடுமையான கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் தான் மரணமடைந்தார் என மருத்துவ அறிக்கை வெளியானதை தொடர்ந்து கலாபவன் மணியின் மரணத்தில் எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது.
தனது நடிப்பு மூலம் கிடைத்த பெயர் புகழ் என வாழ்ந்து வந்த கலாபவன் மணி சொந்தமாக இரண்டு பங்களா மற்றும் காருடன் செல்வசெழிப்பாக இருந்தார். ஆனால் எப்போது அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானாரோ அன்றே அவரது வாழ்க்கை சீரழிந்தது. இறுதியில் அவர் உயிர் பிரிந்தது தான் மிச்சம். குடியால் தனது வாழ்க்கையை அவரே தொலைத்து கொண்டாரே என ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் கூறினார்கள்.