புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடக்குமுறைகளை எதிர்க்கும் டாணாக்காரன்.. விக்ரம் பிரபுவின் வேற லெவல் டீசர்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு.

அதனை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி எனும் படம் வெளியானது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது, இதனை தொடர்ந்து டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து தோல்விப் படங்களை வழங்கி வந்த விக்ரம் பிரபுவிற்கு டாணாக்காரன் படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Trending News