Veera Dheera Sooran Movie Review: சித்தா புகழ் அருண்குமார், விக்ரம் கூட்டணியில் வீர தீர சூரன் இன்று மாலை பல தடைகளை தாண்டி வெளியாகி இருக்கிறது. காலையிலிருந்து எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்கள் தற்போது முதல் காட்சி பார்த்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
அதேபோல் தற்போது சோசியல் மீடியாவில் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. பல யுகங்களுக்கு பிறகு விக்ரமுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் என அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் படம் எப்படி இருக்கு? இந்த இரண்டாம் பாக முயற்சி ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
சீயானின் வீர தீர சூரன் 2 முழு விமர்சனம்
கதைப்படி எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அவர் தாதா ரவி மற்றும் அவர் மகன் கண்ணனை எப்படியாவது என்கவுண்டர் செய்ய ப்ளான் போடுகிறார்.
இதை தெரிந்து கொண்ட இருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விக்ரமிடம் செல்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளும் விக்ரம் அவர்களை காப்பாற்றினாரா?
எஸ் ஜே சூர்யாவின் இந்த கோபத்திற்கு என்ன காரணம்? விக்ரம் எதற்காக இதற்கு சம்மதித்தார்? இவர்களுக்கு இடையே இருக்கும் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படம்.
முதல் பாதியின் தொடக்கத்திலிருந்து திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். அதேபோல் கதாபாத்திரங்களையும் சரியாக வடிவமைத்துள்ளார்.
அதற்கு பெரும்பலமாக இருக்கிறார் விக்ரம். ஆக்சன் காட்சியில் தொடங்கி ஒவ்வொன்றிலும் வழக்கம் போல மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக எஸ் ஜே சூர்யாவை வித்தியாசமான ஒரு நடிப்பில் பார்க்க முடிகிறது.
வழக்கமான ஸ்டைல் இல்லாமல் இருப்பதே புதுமையாக இருக்கிறது. அதேபோல் நாயகி துஷாரா விக்ரமை கட்டுப்படுத்தும் மனைவியாக துணிச்சலான நடிப்பை கொடுத்துள்ளார்.
மலையாள நடிகர் சுராஜ் கதாபாத்திரமும் சிறப்பு. இன்னும் கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கலாம். அடுத்தடுத்து தமிழ் படங்களில் இவரை கட்டாயம் பார்க்கலாம்.
இவர்களுக்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரும் பிளஸ் ஆக இருக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவு இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சியின் சிங்கிள் ஷாட் என ஒவ்வொன்றும் சிலிர்க்க வைத்துள்ளது.
இப்படி படத்தில் நாம் வியந்து பார்க்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் சுவாரஸ்யம் குறைவாக தெரிகிறது.
ஆனால் மொத்த படத்தையும் பார்க்கும்போது இது குறையாக இல்லை. ஆக மொத்தம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தூள் சியான் விக்ரமின் சம்பவம் செமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.75/5