விஷால் வெற்றி கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. போதாக்குறைக்கு நடிகர் சங்க பஞ்சாயத்து வேறு. ஒருவழியாக மனுசன் அனைத்தையும் தாண்டி தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பில் ஹயாதி என்ற இளம் நடிகையும், முக்கிய கதாபாத்திரங்களில் விஷாலின் நண்பர்களான ரமணாவும் நந்தாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட வீடியோக்களை கூட விஷால் தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு எதிர்பார்ப்பு அதிகப்படுத்தினார்.

தற்போது இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பல யோசனைகளுக்கு பிறகு தல அஜித்துடன் ஜனா படத்தில் நடித்த மலையாள நடிகர் பாபுராஜ் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக மற்ற மொழிகளில் ஓரளவு பிரபலமாக இருக்கும் நடிகர்களை தங்களுடைய படங்களில் நடிக்கவைக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் அந்தந்த மாநிலங்களில் அவர்களுடைய மார்க்கெட்டை அதிகப்படுத்துவதற்கு தான்.
விஷாலுக்கு ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கில் ஓரளவு நல்ல மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் மலையாளத்திலும் தன்னுடைய மார்க்கெட்டை அதிகப்படுத்த இந்த முயற்சியை எடுத்து உள்ளதாக கூறுகின்றனர் விஷால் வட்டாரங்கள்.