இந்தியாவின் டெஸ்ட் ஜாம்பவான்கள் என்றால் இரண்டு பேரை குறிப்பிட்டுச் சொல்லலாம். ராகுல் டிராவிட் மற்றொன்று ஆஸ்திரேலியாவையே கதறவிடும் நம்ம விவிஎஸ் லக்ஷ்மனன்.
பந்து வீச்சுக்கு பெயர் போன ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சவால் விடும் போட்டியாளர் விவிஎஸ் லக்ஷ்மனன். கிளன் மெக்ராத், பிரட்லி, ஜேசன் கில்லஸ்பி போன்ற பவுலர்களை எளிதாக சமாளித்து விளையாடக் கூடியவர். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே பல சாதனைகளை படைத்துள்ளார் இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த ஆறு சதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 4 சதங்கள் அடங்கும்.
2000, சிட்னி – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்காக 552 ரன்களை எடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி வீரர்கள் அனைவரும் வரிசையாக பெவிலியன் திரும்பினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லக்ஷ்மனன் ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கினார் வெறும் 114 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
இவரது விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியினர் பெரிதும் போராடினர். இறுதியில் 198 பந்துகளில் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டி இந்தியாவிற்கு ஒரு கௌரவ தோல்வியாக அமைந்தது.
2003/2004 அடிலைட் மற்றும் சிட்னி போட்டிகள் – இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு தொடர். டிராவிட்டின் ஆக்கிரமிப்பால் இந்திய அணி அடிலைட் போட்டியை வென்றது. சச்சினின் சரவெடியால் இந்திய அணி சிட்னி போட்டியை வென்றது. ஆனால் இவ்விரு போட்டிகளிலும் ஆபத்பாந்தவனாய் செயல்பட்டது நம் விவிஎஸ் லக்ஷ்மன் தான்.
அடிலைட் போட்டியில் ராகுல் டிராவிட் உடன் கைகோர்த்து 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிட்னி போட்டியில் 178 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அடித்தளம் போட்டது லக்ஷ்மனின் சாதனைகளே. சிட்னி போட்டியில் சச்சின் அடித்த 241 ரன்னுக்கு முன் லட்சுமணன் அடித்தது பெரிதாக பேசப்படவில்லை.
2008 பெர்த் – போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 330 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா அதன் பங்கிற்கு 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 118 ரன்கள் லீடுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் போது லக்ஷ்மன் மட்டும் நிலைத்து நின்று, கடைசி 4 விக்கெட்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியாவின் ஸ்கோரை 413 ரன்கள் ஆக உயர்த்தினார். இறுதியில் அந்த போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கொல்கத்தா 2001 – ஆஸ்திரேலியா அணிக்கு மறக்க முடியாத ஒரு அடி என்றால் அது கொல்கத்தா டெஸ்ட். இந்திய அணி பாலோ ஆன் பெற்று இந்த போட்டியை வென்றது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஆகும். லக்ஷ்மனன் டெஸ்ட் போட்டிகளில் அதிக பட்சமாக 281 ரன்களை இந்தத் தொடரில் பதிவு செய்தார். அவருடன் இணைந்து ராகுல் டிராவிட் தன் பங்கிற்கு 180 ரன்களை குவித்தார்.
இறுதியில் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பு என்னவென்றால் ஒரு நாள் முழுவதும் ஆஸ்திரேலியா பவுலர்கள் போராடியும் இந்திய அணியின் விவிஎஸ் லக்ஷ்மனன் மற்றும் ராகுல் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.