வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்த இயக்குனர்களின் படத்தில் இதெல்லாம் நிச்சயம் இருக்கும்.. கதைய நம்பாம இத நம்புனா எப்படி

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ, அந்த அளவிற்கு சில சென்டிமென்ட்டும் வைத்துள்ளனர். இந்த சென்டிமென்ட் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நம்பவும் செய்கிறார்கள். அப்படி எந்த இயக்குனர் என்ன சென்டிமென்ட் வைத்துள்ளார் என்பதை பார்ப்போம்.

இயக்குனர் ஹரி –  இவருடைய திரைப்படம் ஒரு பரபரப்பான கதையாக இருக்கும். அதிலும் போலீஸ் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். உதாரணமாக சாமி, சிங்கம் போன்ற திரைப்படங்கள் பல பாகங்களாக வெளிவந்துள்ளது. அவர் தன்னுடைய திரைப்படத்தில் கோவில் கோபுரத்தை காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதிலும் அந்த கோபுரத்தை காட்டும் போது பின்னணியில் டொய்ங் என்ற மணி சத்தம் கண்டிப்பாக இடம்பெறும்.  இதை அவர் அனைத்து திரைப்படத்திலும் பின்பற்றி வருகிறார்.

மணிரத்னம் – அழகான காதல் கதைகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் மணிரத்னம். அவருடைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரமாக ட்ரெயின் இடம்பெறும். அலைபாயுதே திரைப்படத்தில்  அதிக காட்சிகள் ட்ரெயினில் படமாக்கப்பட்டிருக்கும். இதுதவிர பாம்பே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களிலும் இந்த காட்சி இடம் பெற்றிருக்கும்.

விசு – இவரின் திரைப்படம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கோதாவரி என்ற கதாபாத்திரம் தான். அதையும் தாண்டி சற்று கவனித்துப் பார்த்தால் அவருடைய திரைப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் உமா என்ற பெயரைக் கொண்டு இருக்கும். சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் நடிகை லட்சுமியின் கதாபாத்திரம் உமா. இதுதவிர பெண்மணி அவள் கண்மணி,  அவள் சுமங்கலி போன்ற திரைப்படங்களிலும் உமா கதாபாத்திரம் நிச்சயம் உண்டு.

சங்கர் –  தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட  இயக்குனராக வலம் வருபவர் சங்கர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இவருடைய  படங்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு வார்த்தையில் இருக்கும். இதற்கு உதாரணம் ஜென்டில்மேன்,  நண்பன், எந்திரன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் ஆகும்.

கௌதம் வாசுதேவ் மேனன் – இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் ரொமான்டிக் மற்றும் திரில்லர் திரைப்படங்கள் இயக்குவதில் வல்லவர். இவருடைய திரைப்படத்தில் வரும் கதாநாயகன் கையில் காப்பு அணிந்து இருப்பார். இதை அவரின் எல்லா திரைப்படத்திலும் நாம் காணலாம்.

பாலா –  உணர்ச்சிபூர்வமான பல கதைகளை நமக்கு தந்தவர் இயக்குநர் பாலா. அவருடைய படத்தை பார்த்து கண் கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடைய திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் இறந்துவிடும். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் இறப்பது போல் காண்பித்து இருப்பார்.

பேரரசு – தற்போது இவர் எந்த படங்களும் இயக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்களை நமக்குத் தந்தவர். இவருடைய அனைத்து திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட ஊரின் பெயரை கொண்டு இருக்கும்.  திருப்பாச்சி, திருப்பதி, சிவகாசி போன்ற படங்கள் ஒரு ஊரின் பெயரைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இதையே அனைத்து படங்களிலும் அவர் பின்பற்றினார்.

கே.எஸ்.ரவிக்குமார் – இவர் தான் இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு சிறிய தோற்றத்தில் வருவார். இதை அவர் அனைத்து திரைப்படங்களிலும் வழக்கமாக கொண்டுள்ளார். நாட்டாமை, முத்து, படையப்பா போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணம்

Trending News