வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய்க்கு சத்யராஜ் ஆதரவளித்த நிலையில், ரஜினியை சந்தித்த சீமான்.. அரசியலில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சாதிக்காதது ஒன்றுமில்லை. 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர்தான் வசூலிலும், ரசிகர் செல்வாக்கிலும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இன்றும் தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் டைட்டில் அவருக்கு மட்டும்தான் என்பதில் ரசிகர்கள் குறியாக உள்ளனர்.

ஆனால், அவர் அரசியலுக்கு வருவதாக 96 ஆம் ஆண்டு முதல் முதன்முதலாக குரல் கொடுத்தார். இன்றே இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து டிரெண்டிங் என்றால் அப்போது சொல்லவா வேண்டும்? அப்போது, திமுகவுடன் த.மா.காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதற்கு ரஜினி ஆதரவளித்தார். இதில் திமுக கூட்டணி வென்றது.

அதன்பின் அதிமுகவுக்கு எதிரான மன நிலையோடு திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தாலும் அது எடுபடவில்லை. அப்படி இப்படி என 24 வருடங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி சொல்லியே அவரது ரசிகர்களும் சோர்ந்தனர்.

அரசியலில்தான் அவர் தாமதமே தவிர இன்று வரை படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதற்கிடையே, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தன் அரசியல் வருகையை ரஜினி அறிவித்து, கலைஞரிடமும் சென்று ஆசீர்வாதம் பெற்றார். இது காலத்தின் தேவை என்றார். ஆன்மிக அரசியல் என்று பேசினார். 234 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறங்குவதாக கூறினார்.

அதன்பின் கட்சி தொடங்குவதற்கான திட்டங்களும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டாலும் ரஜினி நாட்களை தள்ளிப்போட்டுக் கொண்டே போனார். அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவேகட்சி அறிவிப்பும் வெளியாகும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக, 2020 வது வருடம் டிசம்பர் 29 ஆம் தேதி அரசியலுக்கு வர முடியவில்லை என்று கூறினார். ஆனால், அவருக்கு பின் கட்சி அரசியல் பிரவேசம் எடுத்த கமல், விஜய் இருவரும் தொடர்ந்து அரசியலில் பயணித்து வருவது குறித்து பலரும் ரஜினியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சீமான், ரஜினிகாந்த் சந்திப்பு பின்னணி என்ன?

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டிய விஜய், சீமானை சீண்டியும் , திமுக வாரிசு அரசியல் என்று விமர்சித்திருந்தார். இதற்கு சீமான் கடுமையாக மேடையில் எதிர்வினை ஆற்றியிருந்தார்.

இந்த நிலையில், விஜய்க்கு சத்யராஜ் ஆதரவு தெரிவித்து, அக்கட்சியில் இணைய ரெடி என்று இன்று தெரிவித்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சீமான், ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர். தற்போது தவெகவையும் விஜய்யையும் எதிர்த்து வரும் நிலையில், ரஜினியை நேரில் சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அரசியல் வருகையால் ரஜினி மீண்டும் அரசியல் கட்சி தொடங்கப்போகிறாரா? அல்லது 90 களில் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்து, திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தது மாதிரி வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இதன் மூலம் மறைமுக ஆதரவு தெரிக்கிறாரா? அல்லது இது ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படமா என எனக் கேள்வி எழுந்துள்ளது. தற்போது இப்புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News