ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான ஆடுகளம் படத்தில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதோடு, தேசிய விருதும் வென்றதால் டாப்ஸியின் மார்க்கெட் எகிறியது. ஆனால் தமிழில் அல்ல தெலுங்கு மற்றும் பாலிவுட்டில்.
இருப்பினும் தமிழ் சினிமா தான் தன்னை அறிமுகப்படுத்தியது என்பதால் டாப்ஸி தென்னிந்திய சினிமாவிற்கு நன்றி கடன் பட்டுள்ளதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். தமிழில் இறுதியாக ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படத்தில் நடித்த டாப்ஸி அதன் பின்னர் ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பினார். அதுவும் விஜய் சேதுபதி படத்தில். இயக்குனர் தீபக் செளந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான அனபெல் சேதுபதி படத்தில் தான் டாப்ஸி ரீ என்ட்ரி கொடுத்தார். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய டாப்ஸி, “அனபெல் சேதுபதி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் பேய் படத்திலேயே நடிக்க கூடாது என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்படத்தின் இயக்குனர் எனக்கு கதையை எடுத்துச் சொல்லி இது ஒரு பேண்டஸி படம் என்றார். அதனால் தான் சம்மதித்தேன்.
நான் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கதையை தேர்வு செய்வதில்லை. இதே கதையை பாலிவுட்டில் கூறி இருந்தாலும் நடித்திருப்பேன். கடந்த ஆறு ஆண்டுகளாக, நான் ஒரு ரசிகையாக இருந்தே படங்களை தேர்வு செய்தேன். ஆனால் இனி பேய் படங்களில் நடிக்க போவதில்லை” என கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி – டாப்ஸி நடிப்பில் வெளியான அனபெல் சேதுபதி படம் ஒரு பேண்டஸி படமாக இருந்தாலும், ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் கவரவில்லை. எதிர்பார்த்ததைவிட மோசமான தோல்வியையே இப்படம் தழுவியது. இதனால் தான் டாப்ஸி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.