நாச்சியார் டீசரில் ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை இதுவரை இல்லாத அளவு அவர் பெயரை கலங்கப்படுத்தியுள்ளது. அனைத்து சமூக வலைதளங்களிலும், தொலைகாட்சி விவாத மேடைகளிலும் இதன் தாக்கம் கடந்த சில நாட்களாக பரவிவருதல் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜோதிகாவிடம் இதுகுறித்து கேட்டபோது “அதை பற்றி பேச இது இடமல்ல, படம் வெளியான பின் அந்த வசனத்திற்கான தேவை உங்களுக்கே புரியும்” என்று பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்திருந்தார் ஜோதிகா.
சரி அப்படி அவர் பேசிய ****யா பசங்களா என்ற வார்த்தை தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் உண்மையான பதில். இன்னும் பழைய சினிமாக்களை திரும்பி பார்த்தால் இந்த வார்த்தை கெட்ட வார்த்தையாகவே அப்போது பார்க்கப்படவில்லை என்ற உண்மை விளங்கும். அந்த அளவிற்கு ஒரு சகஜமான வார்த்தையாக இது பேசப்பட்டிருந்தது.
அப்படி அந்த வார்த்தையை யார் யார் என்னென்ன படங்களில் பேசியுள்ளார்கள் என்று பார்ப்போம் வாங்க.
கமல்:
1986ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலே தயாரித்தார். படத்தில் தனது மனைவியை கொன்றவுடன் ஆவேசம் வந்து மீண்டும் காவல் துறையில் இணைவார் கமல். அப்போது கோபத்தில் தனது உயர் அதிகாரியான சாருஹாசனிடம் அந்த வார்த்தையை பிரயோகித்திருப்பார் கமல்.
ரஜினி:
ரஜினி, விஷ்ணுவரதன், சிவாஜி நடிப்பில் 1986ல் வெளிவந்த படம் விடுதலை. இந்த படத்தில் ரவுடிகளிடம் பாஸ்** என்னும் ஆங்கில வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் கூறுவார் ரஜினி. அதிலிருந்து சண்டை துவங்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இதே போல் அவள் ஒரு தொடர்கதை படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜெயகணேஷ் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார், தனது தங்கையான ஜெயப்ரதா தனக்கு பணம் தராத கோவத்தில் தங்கையை தரக்குறைவாக அந்த வார்த்தை சொல்லி அவமதிப்பார் ரஜினி.
அஜித்:
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து பெரு வெற்றிபெற்ற திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் ரவுடிகள் சிலபேர் அஜித் வீட்டிற்கு வந்திருப்பார். அப்போது ஒரு ரவுடி அஜித்திடம் “இங்க வேணுகோபால்னு யாராவது இருக்காங்களா” என்று கேட்பார் அதற்கு அஜித் “எந்த ***யா பயலும் இங்க இல்லை” என்று பதில் சொல்வார்.
பார்த்திபன்:
பார்த்திபன் நடித்த உள்ளே வெளியே, புதிய பாதை போன்ற படங்களில் அந்த வார்த்தையை பேசியிருப்பார்.
M.N ராஜம்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடித்த வந்தாளே மகராசி என்ற படத்தில் M.N.ராஜத்திற்கும் ஜெயலலிதாவிற்கும் நடக்கும் வாய்த்தகராறில் இருவரும் மாறி மாறி அந்த வார்த்தையை கூறுவர்.
விக்ரம்:
சாமி படத்தில் அரசியல்வாதியான தியாகுவிடம் அவரை கோவப்படுத்தி கைது செய்வதற்காக அந்த வார்த்தையை கூறுவார் விக்ரம்.
இன்னும் இது போன்று பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம்.