20 வருடங்களாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மட்டுமே இயக்கி கொண்டிருக்கும் ஹரி உடைய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதுவும் குடும்ப சென்டிமென்ட் படங்களை எடுப்பதில் கில்லாடியான இயக்குனர் ஹரி இயக்கத்தில், முதல் முதலாக அருண் விஜய்யுடன் இணைந்து உருவாக்கிய யானை திரைப்படம் பல தடைகளை மீறி ஜூன் 1ம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் வெளியான வேல், வேங்கை, கோவில் போன்ற படங்களின் நல்ல நல்ல காட்சிகளை மொத்தமாக சேர்த்து யானை படத்தில் காட்டியுள்ளார்.
இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. யானை திரைப்படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களில் ரூபாய் 9 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி உலக அளவில் முதல் மூன்று நாட்களில் 5.5 கோடியும் தமிழகத்தில் 4.5 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் ஆகி இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 1100 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸான ஹரியின் யானை திரைப்படம் நான்காவது நாளின் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 12 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த படத்தின் வசூல் சுமார் 16 கோடி வசூல் ஆகி இருக்கிறது.
ரிலீஸ் ஆன நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு வரவேற்பு குறையாமல் இருப்பதால் அருண்விஜய் நடித்த மற்ற படங்களை காட்டிலும் யானை திரைப்படம் வசூல் ரீதியாக புதிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான திரைப்படங்களில் அருண் விஜய்யை போலீஸ் அல்லது நகரத்து இளைஞன் வேடத்தில் பார்த்துவிட்டு தற்போது முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக யானை படத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
மேலும் ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான ஒரு சில படங்கள் சரிவர ஓடாததால் கடந்த 4 வருடங்களாக இவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியிருக்கும் யானை திரைப்படம் ஹரிக்கு நல்ல கம் பேக் கொடுத்திருக்கிறது.