நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி. ஆர். எஸ். சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் பயில்வான் ரங்கநாதன், சத்யன், லொள்ளு சபா ஜீவா, வாசுவிக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜே.வி அவர்களின் இசையில் ஆனந்த் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் இப்படத்தினை உருவாக்கியுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் நடிகை யாஷிகா விபத்தில் சிக்கினார். அவர் இதில் கிளாமர் மட்டுமல்லாது நடிப்பிலும் அசத்தியுள்ளார் என்று இயக்குனர் கூறியுள்ளார். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது டொரொண்டோ இன்டர்நேஷனல் தமிழ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்திற்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்த நடிகர் அசோக்கிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
மேலும் சிறந்த முறையில் கதை, திரைக்கதை,இயக்கம் என பெஸ்டி படத்தை இயக்கியதற்கான விருதும் கிடைத்துள்ளது. இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் ஆகிய அனைவருக்கும் புகழையும், பாராட்டையும், விருதினையும் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அசோக், நடிகை யாஷிகாவை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.