
வெத்து வேட்டு, பரிவர்த்தனை போன்ற படங்களை இயக்கிய எஸ். மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீகாந்த் மற்றும் சிருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள திரைப்படம் தி பெட். ஊட்டி பின்னணியில் ஒரு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
nn
நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விடுமுறையைக் கழிக்கத் திட்டமிடுவது என்பது இளைஞர்களின் வழக்கமான ஒன்று. அப்படி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் குழு, வார இறுதி விடுமுறையைக் கொண்டாட மலைகளின் அரசியான ஊட்டிக்குச் செல்கிறார்கள்.
nn
அங்கு அவர்கள் தங்குவதற்காக ஒரு விடுதியை புக் செய்கிறார்கள். இந்த பயணத்தில் அவர்களுடன் சிருஷ்டி டாங்கேவும் இணைகிறார். ஆனால், சிருஷ்டி அவர்களின் நண்பர் அல்ல, பணத்திற்காக அவர்களுடன் நேரம் செலவிட வந்த ஒரு பெண்.
nn
பயணத்தின் தொடக்கத்தில் கலகலப்பாக இருக்கும் நண்பர்கள் குழுவில், சிருஷ்டியைப் பார்க்கும் பார்வையில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நண்பர்கள் அவரை ஒரு போகப் பொருளாகப் பார்க்க, கதாநாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் அவரிடம் ஒரு மென்மையான அன்பைச் செலுத்துகிறார்.
nn
ஒரு கட்டத்தில் சிருஷ்டியை அடைய நண்பர்கள் முயற்சி செய்ய, அதை ஸ்ரீகாந்த் தடுக்கிறார். இந்த மோதலுக்கு நடுவே, எதிர்பாராத விதமாக சிருஷ்டி மற்றும் ஒரு நண்பர் மாயமாகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள்? இந்த காணாமல் போன சம்பவத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
nn
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீகாந்துக்கு இது ஒரு சவாலான கதாபாத்திரம். ‘வேலு’ என்ற பாத்திரத்தில் அவர் காட்டியிருக்கும் முதிர்ச்சியான நடிப்பு பாராட்டுக்குரியது. ஒரு பக்கம் நண்பர்களின் வற்புறுத்தல், மறுபக்கம் ஒரு பெண் மீதான மனிதாபிமானம் என இரண்டிற்கும் இடையே தவிக்கும் ஒரு இளைஞனை அழகாகப் பிரதிபலித்துள்ளார்.
nn
இப்படத்தின் மையப்புள்ளியே சிருஷ்டி தான். கிறிஸ்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், தனது அழகாலும் எதார்த்தமான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். ஒரு விலை மாதுவாக அறிமுகமானாலும், படத்தின் பின்பாதியில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் ரசிகர்களை நெகிழ வைக்கின்றன.
nn
படத்தில் ஜான் விஜய் வழக்கம்போல தனது ஸ்டைலான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் தேவி பிரியா மற்றும் பிளாக் பாண்டி, வி ஜே பப்பு, விக்ரம் ஆனந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். குறிப்பாக பிளாக் பாண்டி மற்றும் நண்பர்களின் நகைச்சுவை கலந்த உரையாடல்கள் முதல் பாதியில் கலகலப்பைத் தருகின்றன.
nn
சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5