MYV3 APP: சூரியவம்சம் படம் போல ஒரே பாட்டில் பணக்காரராக ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகமானோர். அதனால் அந்த ஆசையை தூண்டிவிடும் அளவிற்கு பல மோசடிகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. மக்களும் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆசையில் யாராவது ஒருத்தர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லிவிட்டால் உடனே அதை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போய் விடுகிறார்கள்.
இதனால் தொடர்ந்து பண மோசடி நடந்து கொண்டே இருக்கிறது. இதுபோல பல செய்திகள் வந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் யாரையாவது நம்பி பணத்தை முதலீடு செய்து கொஞ்ச நாள் பணத்தை சம்பாதித்தவுடன் தொடர்ந்து அதன் மேல் நம்பிக்கை வைத்து அதிகமான பணத்தை போட்டு விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய கல்லாப்பெட்டி நிறைந்த உடன் பாமர மக்களுக்கு டாடா காட்டி விட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.
ஆசை காட்டி மோசம் பண்ணிய நிறுவனம்
அந்த வகையில் சமீப காலமாக MYV3 APP மூலம் வீட்டில் இருந்தபடியே விளம்பரங்கள் பார்த்து சுலபமாக சம்பாதிக்கலாம் என ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தை நம்பி பொதுமக்களும் கிட்டத்தட்ட 2431 கோடி முதலீடு செய்து இருக்கிறார்கள். கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆரம்ப தொகையாக 360 முதல் 121000 ரூபாய் வரை பணத்தைக் கட்டி உறுப்பினராக சேரலாம்.
அதன்படி அவர்களுக்கு மாத வருமானம் கிடைப்பது போல் கொஞ்ச நாளாக செயல்பட்டு வந்தது. இதில் ஏதாவது ஒரு பிளானை ஆக்டிவிட்டி செய்து அதன் மூலம் 5 முதல் 1800 வரை தினமும் சம்பாதிக்க முடியும் என ஆயிரக்கணக்கான மக்களை முதலீடு செய்ய வைத்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்திருக்கிறார்கள்.
இதை கூகுள் பிளே ஸ்டோர் ஆப்பில் இருந்து டவுன்லோட் பண்ணி அதன் மூலம் விளம்பரங்களை பார்க்கும் படியாக அமைந்திருந்தது. இதனை நம்பி பாமர மக்களும் முதலீடு செய்து விளம்பரங்களை பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது இதில் மோசடி ஏற்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜயராகவன் மற்றும் சக்தியானந்தன் ஆகிய இருவர் மீது மோசடி செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் விஜயராகவன் என்பவர் கைது செய்யப்பட்டார். சக்தியானந்தன் சரணடைந்திருக்கிறார். இருவரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள். இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மைவி3 ஆப் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முதலீடு செய்த பல லட்சம் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அத்துடன் செயலி முடங்கியதால், முதிர்வு தொகை, தவணை தொகை எதுவும் பெற முடியாது. புதிதாக இந்த செயலியில் முதலீட்டாளர்களாக சேரவும் முடியாது என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.