தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் நடிகர் பாபி சிம்ஹா. என்னதான் ஹீரோவாக பல படங்களில் நடித்தாலும் வில்லத்தனத்தில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். தற்போது பட வாய்ப்புகள் சரிவர இல்லையென்றாலும் பாபி சிம்ஹா வில்லனாக நடித்த தரமான படங்களே அவரின் கேரியரை நிலைநாட்டியது, அப்படிப்பட்ட 5 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
ஜிகர்தண்டா- அசால்டு சேது: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் சக்கைப்போடு போட்டது. நடிகர் சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா மிரள வைத்திருப்பார். மதுரையை ஆளும் தாதாவாக இவரின் நடிப்பு தெறிக்கவிட்ட நிலையில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார்.
நேரம்- வட்டி ராஜா: இயக்குனர் ராஜேஷ் முருகேசன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காதல், ஆக்ஷன் என வெளியாகி செம ஹிட்டானது. நிவின் பாலி, நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் பணத்தை வட்டிக்கு விடும் ரௌடியாக வட்டி ராஜா கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருப்பார். குறு மீசை, கழுத்து நிறைய நகை என உலா வரும் பாபி சிம்ஹாவின் காமெடி கலந்த வில்லத்தனம் இப்படத்தில் பெருமளவில் பேசப்பட்டது.
மெட்ரோ- குணா: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மெட்ரோ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ஷிரிஷ் சரவணா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் குணா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாபி சிம்ஹா வலம் வருவார். கஷ்டப்படும் இளைஞர்களை செயின் பறிப்பு உள்ளிட்ட தவறான பழக்கத்தில் கொண்டு செல்லும் கேங் லீடராக பாபி சிம்ஹா வில்லத்தனத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
Also Read: ஹீரோவை மிஞ்சிய 6 வில்லன் கதாபாத்திரம்..அஜித்திற்கு பயத்தை காட்டிய விக்டர்
சூது கவ்வும்- பகலவன்: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருப்பர். கடத்தல், நட்பு, காமெடி என உருவான இப்படத்தில் பாபி சிம்ஹாவின் பகலவன் கதாபாத்திரம் காமெடி கலந்த நடிப்புடன் ரசிகர்களை கவர்ந்திருக்கும்.
ராவண பிச்சை- சாமி ஸ்கொயர் : இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சாமி ஸ்கொயர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. இருந்தாலும் ராவண பிச்சை கதாபாத்திரத்தில் வரும் பாபி சிம்ஹாவின் வில்லத்தனமான நடிப்பு இப்படத்தில் தெறிக்கவிட்டிருக்கும். விக்ரமுக்கு ஏற்ற வில்லனாக பாபி சிம்ஹா இப்படம் முழுவதும் வலம் வருவார்.