5 Films that will flop in 2023: இந்த வருடம் வெளியான சின்ன சின்ன படங்கள் கூட சற்றும் எதிர்பாராத மாபெரும் வெற்றியை கொடுத்தது. ஆனால் 2023ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆறு படங்கள் வசூலில் மண்ணைக் கவ்வி மொக்கை வாங்கியது.
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்: தென் தமிழக பின்னணியில் மண்ணுக்காகவும் பொண்ணுக்காகவும் நடக்கும் கொலைவெறி மோதலை மீண்டும் ஒருமுறை இயக்குனர் முத்தையா இந்த படத்தில் காட்டி இருக்கிறார். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆங்காங்கே சிறு புதுமைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பழைய கதை. அலுப்பூட்டும் திரைக்கதையால் தியேட்டருக்கு பார்க்க வந்தவர்கள் எல்லாம் தெறிந்து ஓட வைத்துவிட்டனர்.
இறைவன்: இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்யும் சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் காவல் உதவி ஆணையராக ஜெயம் ரவி, நரேன் இருவரும் இதில் நடித்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு நடக்கும் அசம்பாவிதத்தால் அவர் போலீஸ் வேலையை விட்டு செல்கிறார் என்றாலும் அவரை துரத்திக் கொண்டே வரும் சைக்கோ கில்லரை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. தொடர்ந்து ஜெயம் ரவி ஒரே மாதிரியான நடிப்பை மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதால் தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களுக்கு போரடித்தது. அது மட்டுமல்ல இறைவன் படத்தில் இழுவையாக இருந்த காட்சிகளுக்கு தயக்கமில்லாமல் கத்தரி போட்டு இருந்தால் படம் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும்.
டக்கர்: பணக்காரனாக இருந்தால் தான் நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும் என நினைத்து ஓடும் இளைஞனும், அதீத பணத்தால் விரக்தியுடன் வாழும் இளம் பெண்ணும் சந்தித்துக் கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன நிகழும் என்பதுதான் இந்த டக்கர் படம். இதில் சித்தார்த் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார்.
இதில் இடம் பெற்ற கிராமத்து ஏழை கதாநாயகன், பணக்காரனாக சென்னைக்கு படையெடுப்பது, பல வேலைகளைப் பார்த்து கிடைத்த அனுபவம், பணக்கார பெண்ணை பார்த்ததும் காதல், இவற்றையெல்லாம் பார்த்தால் பழங்கால திரைக்கதையாக ஒலியும் ஒளியும் ஆக முதல் பாதி ஓடுகிறது. அதிலும் இதில் ஹீரோ- ஹீரோயின் மோதல் என கூடுதலாக 15 நிமிஷம் இழுத்தடிக்கின்றனர். ஒற்றை வசனத்தில் தீர வேண்டிய பிரச்சனையை வைத்து பார்ட் 2 கணக்காக காட்சிகளை இழுத்தது, படத்தைப் பார்க்க வந்தவர்களை தெறிக்க ஓட விட்டனர்.
2023ல் பிளாப் ஆன 6 படங்கள்
ஜப்பான்: கமர்ஷியல் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்துக் கொண்டிருந்த கார்த்தி தன்னுடைய 25 ஆவது படமாக இயக்குனர் ராஜுமுருகனுடன் முதல்முறையாக ஜப்பான் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இதில் 200 கோடி நகை கொள்ளை, போலீஸ் விசாரணை, திருடன் என பரபரப்பான ஆடு புலி ஆட்டத்தை ஆடி இருக்கலாம். ஆனால் அதற்கான காய் நகருதல் சரியில்லை.
இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்து இடைவெளி வரை திரைக்கதை எதையெதையோ நோக்கி இலக்கில்லாமல் பயணிக்கிறது. இடைவெளிக்கு பின்பு தான் படத்தின் கதைக்குள்ளேயே வருகின்றார்கள். ஜப்பான் கேரக்டருக்காகவே கார்த்தி தனி ஹேர்ஸ்டைல், ஆடை வடிவமைப்பு, பேச்சு என நிறையவே மாற்றி இருந்தாலும் அவரைப் பார்த்தால் ஒரு நகை திருடன் என்று நம்பும் படி தோற்றமும் அவரது செயலும் இல்லை. கடைசியில் ஜப்பான் கார்த்திக்கு படு தோல்வியாகவே அமைந்தது.
தலைநகரம் 2: சுந்தர் சி-யின் தலைநகரம் படம் வெற்றி பெற்று 17 வருடத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியானது. முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய பலமாக இருந்தது. அதேபோல் இரண்டாம் பாகத்திலும் காமெடி காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். தலைநகரம் 2 படத்தில் காமெடி காட்சிகள் சுத்தமாகவே இல்லை என்பதே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது. இதில் நிறைய வன்முறை காட்சிகள், கிளாமர் காட்சிகளும் பார்ப்போரை சலிப்படைய வைத்தனர். படத்தின் முதல் பாகம் சற்று விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் பலவீனமான திரைக்கதை மற்றும் யூகிக்க கூடிய காட்சிகள் என தலைநகரம் 2 சொதப்பல் ஆனது.
சந்திரமுகி 2: 2005 ஆம் ஆண்டு வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் வசூலில் சக்கை போடு போட்டது. திகில், காமெடி, மாஸ், பாடல்கள், ஆக்சன் என அனைத்திலும் ஆடியன்ஸை திருப்திப்படுத்திய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது. ஆனால் இதில் ரஜினியின் சிஷ்யன் என்று கூறிக் கொள்ளும் ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையனாக நடித்தார். ஆனால் சந்திரமுகி படத்தில் ரஜினியின் பெயரை கெடுக்கும் அளவுக்கு இந்த படத்தை சொதப்பி வைத்து விட்டனர். படத்தைப் பார்த்த பலரும் ‘என்ன கொடுமை வாசு சார் இது!’ என்று தலையில் அடித்தனர்.