வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சாவே இல்லாத சத்திரியன் போலீசாய் மிரட்டிய 5 படங்கள்.. கேப்டனுக்கு கனகச்சிதமாய் பொருந்திய காக்கிசட்டை

Vijayakanth as Police: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் போலீஸ் கேரக்டரில் நடித்து திரையில் பார்த்திருப்போம். ஆனால் அந்த காக்கிச் சட்டை கனக்கச்சிதமாக பொருந்தி, சிங்கம் போல் கர்ஜிக்க ஒரு நடிகரால் முடியும் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு தான் சாத்தியம். அப்படி விஜயகாந்த் காக்கி சட்டையில் போலீஸ் ஆக மிரட்டிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

போலீசாய் மிரட்டிய 5 படங்கள்

ஊமை விழிகள்: ஊமை விழிகள் படத்தின் தீனதயாளனை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. சோலா பிக்னிக் வில்லேஜ் என்னும் இடத்தில் பெண்கள் மர்மமாக கொலை செய்யப்படும் சீரியல் கில்லர் கதையை மையமாகக் கொண்டு வெளியான படம் இது. முழுக்க முழுக்க திரைப்பட கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். அந்த காலகட்டத்தில் இந்த படம் மக்களிடையே போய் சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தீனதயாளன் கேரக்டரில் நடித்திருந்த விஜயகாந்த்.

மாநகர காவல்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மாநகர காவல். இதில் இந்திரா காந்தி கேரக்டரில் லட்சுமி நடித்திருப்பார். அவரை கொலை செய்ய போட்டிருக்கும் திட்டத்திலிருந்து காப்பாற்றும் ஹீரோ கேரக்டர் தான் விஜயகாந்த். ஏ சி பி சுபாஷ் ஐபிஎஸ் ஆக இந்த படத்தில் கேப்டன் வாழ்ந்து இருப்பார்.

சத்ரியன்: இயக்குனர் மணிரத்தினம் கதை எழுதி, தயாரித்த படம் சத்ரியன். இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் பன்னீர்செல்வம் என்னும் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் கலக்கி இருப்பார். அதே நேரத்தில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளிலும் கண்கலங்கி அழ வைத்திருப்பார்.

சேதுபதி IPS: 1990 ஆம் ஆண்டுகளில் கேப்டன் விஜயகாந்த் நடித்த நிறைய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதில் முக்கியமான படம் தான் சேதுபதி ஐபிஎஸ். தீவிரவாதத்தை ஒடுக்கும் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் இந்த படத்தில் மிரட்டி இருப்பார். இன்று வரை அவர் நடித்த நிறைய போலீஸ் படங்களில் இந்த படம் ரொம்ப முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

நரசிம்மா: இந்த நரசிம்மாவை தொட்டால் கரண்டுக்கு ஷாக் அடிக்கும் என விஜயகாந்த் பேசிய வசனம் இன்றுவரை பிரபலம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் தமிழ்நாட்டில் முக்கியமான தலைவர்களை கொல்வதற்கும், முக்கிய கட்டிடங்களை தகர்ப்பதற்கும் திட்டமிட்டு இருப்பார்கள். அவர்களுடன் போராடி ஜெயிக்கும் போலீஸ் அதிகாரி நரசிம்மாவாக விஜயகாந்த் நடித்திருப்பார்.

Trending News