சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராதாமோகன் இயக்கத்தில் ஹிட்டான 5 படங்கள்.. சின்ன கல்லு பெத்த லாபம்!

சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ராதா மோகன். இவருடைய படங்கள் மெல்லிய நகைச்சுவையுடனும், கண்ணியமான காட்சி அமைப்புகளுடன் இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் எல்லோருமே பார்க்கும்படியான படமாக ராதா மோகன் படம் இருக்கும். அவ்வாறு இவரது இயக்கத்தில் ஹிட் கொடுத்த 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

அழகிய தீயே : ராதாமோகன் இயக்கத்தில் பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகிய தீயே. சினிமா துறையில் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டு டைரக்டர், எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மூவருடன், நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஒரு இளைஞனும் இணைந்து போராடுவது இப்படத்தின் கதை.

மொழி : ஜோதிகா, பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. இப்படத்தில் எளிமையான கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குனர் ராதா மோகன். காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத பெண்ணாக ஜோதிகாவின் நடிப்பு இப்படத்தில் அபாரம்.

அபியும் நானும் : பிரகாஷ்ராஜ், தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அபியும் நானும். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், திரிஷா இடையே அப்பா, மகள் பாசம் பிணைப்பினை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்குப் பின்பு ஒரு மகள் தந்தையை பிரியும் போது உள்ள வலியை தத்ரூபமாக காண்பித்து இருந்தார் ராதாமோகன்.

பயணம் : பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் ராஜ்மோகன் இயக்கத்தில் வெளியான படம் பயணம். இப்படத்தில் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முன்பு நடந்த விமான கடத்தல் சம்பவத்தை நம் கண்முன்னே நடப்பது போல் காட்டியிருந்தார் ராதாமோகன். இப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை பெற்றுத் தந்தது.

காற்றின் மொழி : ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் காற்றின் மொழி. ஒரு பெண் தனக்கு பிடித்த வேலையை செய்வதில் கூட எவ்வளவு போராட்டங்கள் இருக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொன்ன படம் இது. கடைசியில் குடும்பத்தை சமாளித்து ஜோதிகா தனக்கு பிடித்த வேலையை செய்கிறாரா என்பதே காற்றின் மொழி.

Trending News