வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தயாரிப்பிலும் பெத்த லாபம் பார்த்த பிரகாஷ்ராஜ்.. காசு போட்ட 6 படங்களுமே ஹிட்

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிப் படங்களிலும் நடித்த பிரகாஷ்ராஜ், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற பெருமைக்குரியவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் தயாரித்த 5 படங்கள் இவருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது.

அழகிய தீயே: 2004 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சினிமா துறையில் உதவியாளராக வேலை செய்து கொண்டே பெரிய டைரக்டராக, திரை எழுத்தாளராக, நடிகராக வர வேண்டும் என்று கனவு காணும் நான்கு நண்பர்களின் கதையை தத்ரூபமாக இந்தப் படத்தின் மூலம் கண்டிருப்பார்கள். வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தயாரிப்பாளரான பிரகாஷ்ராஜுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது .

மொழி: பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் 2007 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கிய இந்தப் படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் கணவனை இழந்த சொர்ணமால்யாவை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொள்வார்.

மேலும் காது கேட்காமலும் வாய் பேசமுடியாமல் நடித்திருக்கும் ஜோதிகா மீது பிரித்விராஜ்க்கு காதல் ஏற்பட்டு அவரை சுற்றி சுற்றி காதலித்து ஒருவழியாய் ஜோதிகாவை காதலிக்க வைத்து விடுவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுபூர்வமான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 10 கோடி வசூலை ஈட்டியது.

அபியும் நானும்: பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கிய இந்தப்படத்தில் அப்பாவாக பிரகாஷ்ராஜும், மகளாக திரிஷாவும் நடித்திருப்பார்கள், இதில் தந்தை-மகள் இருவருக்கும் இடையேயான பாசப் பிணைப்பை கதைக் கருவாகக் கொண்டு படத்தை உருவாக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர்.

கண்ட நாள் முதல்: 2005 ஆம் ஆண்டு வி. பிரியா எழுதி இயக்கிய இந்தப் படத்தை பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். இதில் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். திருமண மண்டபத்தில் சந்திக்கும் இருவர், ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக்கொண்டு அதுவே பிறகு காதலில் முடியும் என்ற காதல் கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி வெற்றிப் படமாக்கினர்.

வெள்ளித்திரை: பிரித்விராஜின் கதையை திருடி கதாநாயகனாக மாறிய பிரகாஷ்ராஜ் வெள்ளித்திரையில் வெற்றி பெறுவதற்காக செய்த துரோகத்தை இந்தப் படத்தில் காட்டியிருப்பார்கள். இதில் பிரகாஷ்ராஜ் நடித்தது மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரித்து வில்லனாக தன்னை சித்தரித்திருப்பார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

பயணம்: நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கும். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரித்தார். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நடுவானில் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது .அதன்பிறகு தீவிரவாதிகளின் கோரிக்கையை கேட்டு அவர்களிடம் சிக்கிக்கொண்ட விமான பயணிகளை எப்படி பாதுகாக்கின்றனர் என்ற பரபரப்பான கதைக்களத்தை கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பைப் பெற்றது,

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தயாரித்த ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய பங்களிப்பையும் அளித்து அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார். மேலும் நடிகராக காசு சம்பாதித்ததை விட ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ்சினிமாவில் பிரகாஷ்ராஜ் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்.

Trending News