சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில நடிகர்கள் தொடர் பட வாய்ப்புகள் இல்லாமல் திடீரென காணாமல் போய்விடுவார்கள். நல்ல நடிப்பு திறமை இருந்தும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு இயக்குனர்களின் மூலம் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும். அதில் ஒரு சிலரே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி காண்பார்கள். அந்த வகையில் இந்த ஐந்து நடிகர்கள் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வினய்: உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். இவர் அப்போது தமிழ் சினிமாவின் பெண் ரசிகைகளால் அதிகமாக கொண்டாடப்பட்டார். ஒரு சில படங்களில் சாக்லேட் பாயாக நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போய்விட்டார். இயக்குனர் நெல்சன் தன்னுடைய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இவரை நடிக்க வைத்திருந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னுடைய நடிப்பு திறமையை காட்டியதால் வினய் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டு இருக்கிறார்.
Also Read:சீரியஸான கேரக்டரிலும் நடித்த சார்லியின் 5 படங்கள்.. ரீ என்டரிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்
சார்லி: 90களின் காலகட்டத்தில் அப்போதைய முன்னணி நடிகர்களான விஜய், அஜித், பிரசாந்த், முரளி போன்றவர்களுக்கு நண்பராக நடித்தவர் தான் சார்லி. அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மாநகரம் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்திற்குப் பிறகு சார்லிக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சார்லி ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் குமார்: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனாக தாஜ்மஹால் திரைப்படத்தின் ஹீரோவாக அறிமுகமானார் மனோஜ் குமார். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் இவருக்கு ரசிகர்களிடம் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு சில காலம் இவர் ஒதுங்கிய இருந்தார். தற்போது இவருக்கு நிறைய படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது. மேலும் மார்கழி திங்கள் என்னும் திரைப்படத்தை இவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
பாபி சிம்ஹா: நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாகவும், வில்லனாகவும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். தற்போது சில காலங்களாக அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பில் ஜிகர்தண்டா மற்றும் பேட்ட போன்ற திரைப்படங்கள் மறக்க முடியாதவை. பாபி சிம்ஹாவுக்கு இரண்டாவது வாய்ப்பாக கிடைத்திருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது.
ஜி.எம்.சுந்தர்: புன்னகை மன்னன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா, புலன் விசாரணை போன்ற திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகர் ஜி.எம்.சுந்தர். அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டினாலும் இவருக்கு ரசிகர்களிடையே பரீட்சையமில்லாமல் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த பிறகு ஜி.எம்.சுந்தருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.