ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பெண் வேடமிட்டு காமெடியில் கலக்கிய 5 நடிகர்கள்.. பக்காவாக செட்டான சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அதேபோல் நகைச்சுவை நடிகர்களும் சில படங்களில் பெண் வேடமிட்ட நடித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று இருந்தது. அவ்வாறு பெண் வேடமிட்டு நடித்த ஐந்து நகைச்சுவை நடிகர்களை பார்க்கலாம்.

நாகேஷ்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ் ஆகியோர் நடிப்பில் 1967 இல் திரில்லர் படமாக வெளியானது அதே கண்கள். இப்படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார் நாகேஷ். இப்படத்தில் நாகேஷ் பெண் வேடமிட்ட செய்யும் நகைச்சுவை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

கவுண்டமணி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நாட்டாமை. இப்படத்தில் கவுண்டமணியின் தந்தையாக செந்தில் நடித்திருப்பார். தன்னுடைய அம்மா யார் என செந்திலிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார் கவுண்டமணி. கடைசியாக ஒரு காட்சியில் மட்டும் கவுண்டமணி பெண் வேடமிட்டு கவுண்டமணியின் அம்மாவாக நடித்திருந்தார்.

வடிவேலு: வைகைப்புயல் வடிவேலு பல படங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்டாளி. இப்படத்தில் வேலன் ஆக இருக்கும் வடிவேலு ஒரு பேட்டியை எடுப்பதற்காக பெண் வேடமிட்டு வடிவு ஆக நடிக்கிறார். வடிவேலு பெண் வேஷமிட்டு நடித்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

விவேக்: செல்வா இயக்கத்தில் மாதவன், அப்பாஸ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குரு என் ஆளு. இப்படத்தில் லஸ்ஸி என்ற லதாவாக விவேக் நடித்திருந்தார். விஜய்யின் யூத், தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களிலும் சில காட்சிகளில் விவேக் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார்.

சந்தானம்: எம் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இப்படத்தில் சில காட்சிகளில் சந்தானம் பெண் வேடமிட்டு கரீனா சோப்ராவாக நடித்திருந்தார். இப்படத்தில் சந்தானத்தின் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜுவல்லரி சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி என்ற வசனம் ட்ரெண்ட் ஆனது. அதுமட்டுமல்லாமல் பெண்ணுக்கே உண்டான பத்து பொருத்தமும் சந்தானத்திற்கு இப்படத்தில் பொருந்தியிருந்தது.

Trending News