Upcoming 6 Movies: இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் படங்கள் எதுவும் சொல்லும் படி மக்களிடம் ரீச் ஆகவில்லை. அதனால் மீதம் இருக்கும் ஆறு மாதத்தில் எப்படியாவது ஒரு சிறந்த படத்தை கொடுத்து விட வேண்டும் என்று அடுத்தடுத்து 6 படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த ஆறு படங்களுமே பெரிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது. அதனால் எப்படியாவது 100 நாளுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் அளவில் பெரிய இலாபத்தை சம்பாதித்து விடும் என்ற எதிர்பார்ப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி எதிர்பார்ப்பை கிளப்பி வெளிவர இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
ராயன்: தனுஷ் இயக்கி எழுதி நடிப்பில் உருவாகியுள்ள 50வது படம் தான் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமான கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார். இவர்கள் காம்போவில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் நல்ல லாபத்தை கொடுத்து வெற்றி படமாக முத்திரை பெற்றது. அந்த வகையில் இப்படமும் நல்ல வசூலை தரும் என்று நம்பி கலாநிதி 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். இதில் தனுசுடன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
போட்டி போட விருப்பம் இல்லாத அஜித்
தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 61 வது படமாக தங்கலான் உருவாகியுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். 100 முதல் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். இதில் விக்ரமுடன், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல் பா ரஞ்சித்தின் படம் எப்படி இருக்குமோ, அதே மாதிரி பழங்குடி மக்களையும் அதற்கு ஒரு தலைவரையும் வைக்கப்பட்டு கிராமத்துக் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது.
கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் 68 ஆவது படமாக விஜய் நடிப்பில் கோட் படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய், அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 300 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் விஜய், அரசியல் பணியில் முழுமையாக ஈடுபட போவதால் கடைசியாக நடித்த கோட் படமும், அடுத்து நடிக்கப் போகும் 69 ஆவது படத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கோட் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் வெளிவர போகிறது.
வேட்டையன்: டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 171 படமாக ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் தயாராக இருக்கிறது. இப்படத்தை 160 கோடி செலவில் லைக்கா நிறுவனமான சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார். ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் மூலம் கமல், லைக்கா நிறுவனத்திற்கு பெரிய நாமத்தை போட்டு விட்டார். தற்போது பெரிய மாற்றத்தில் இருக்கும் லைக்கா முழுமையாக வேட்டையன் படத்தையும் ரஜினியையும் நம்பி இருக்கிறது. இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 10 வெளியிட முடிவெடுத்து இருக்கிறார்கள்.
கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 39 ஆவது படமாக கங்குவா படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. 350 கோடி பட்ஜெட்டில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இதுவரை நடிக்காத ஒரு புது அத்தியாயமாக சூர்யா நடித்திருக்கிறார். இதில் சூர்யாவுடன் பாபி தியோல், திசா பதானி, நடராஜன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை 3டி மற்றும் ஐமேக்ஸ் மூலம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி அனைத்து திரையரங்கிலும் வெளிவரப் போகிறது.
அமரன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் SK 21 வது படமாக அமரன் படம் உருவாகி இருக்கிறது. இதில் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடியாக இணைந்திருக்கிறார். இப்படத்தின் கதை ஆனது முன்னாள் ராணுவ வீரர் முகுந் வரதராஜன் பயோபிக் கதையை படமாக்கப்பட்டிருக்கிறது. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.
இப்படி இந்த ஆறு படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி மட்டும் இந்த ஆண்டு போட்டிக்கு தயாராக இல்லை. அதற்கு காரணம் ஏகப்பட்ட படங்கள் வரிசை கொண்டு இருப்பதால் இவர்களுடன் மோத முடியாமல் அஜித் ஒதுங்கி விட்டார்.