தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் படத்தைப் பார்த்த பின்பு அதிலிருந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரமாவது ஆகும். அந்த அளவுக்கு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த 7 படங்களை தற்போது பார்க்கலாம்.
மண்டேலா : யோகிபாபு கதாநாயகனாக நடித்த இப்படம் தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ஒரு தேர்தலில் ஜாதி எவ்வாறு முன்னுரிமை வகிக்கிறது என்பதையும், ஒரு ஓட்டால் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் மண்டேலா. இப்படம் தேர்தலை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தது.
அருவி : அதிதி பாலன் நடிப்பில் வெளியான திரைப்படம் அருவி. நன்றாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் இப்படம் உள்ளடக்கியிருந்தது. மேலும் அருவி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் யாராலும் அழாமல் இருக்க முடியாது.
ஜோக்கர் : ராஜூமுருகன் சமூகத்தின் மீதான காதலால் எடுத்த படம் ஜோக்கர். இப்படத்தில் தனக்குத் தானே ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டு ஊரில் நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுக்கிறார் குரு சோமசுந்தரம். இப்படத்தில் ஊழல் அரசு, அதிகார வர்க்கம் ஆகியவை தோலுரித்துக் காண்பிக்கபட்டிருந்தது.
திரௌபதி : ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான திரைப்படம் திரௌபதி. ஆணவக்கொலை வேறு ஒரு சதித் திட்டத்தில் நடக்கிறது என்பதை திரௌபதி படம் வெளி கொண்டிருந்தது. ஒரு புதிய சம்பவத்தை கதையாக எடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் மோகன்ஜி.
பரியேறும் பெருமாள் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதிய அடக்குமுறைகளுக்கு சவுக்கடி கொடுத்த படமாக இப்படம் அமைந்திருந்தது. மேலும் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒரு இளைஞனுக்கு நேர்ந்த வன்கொடுமைகளையும் மாரி செல்வராஜ் இப்படத்தில் காட்டியிருந்தார்.
வழக்கு எண் 18/9 : பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான படம் வழக்கு எண் 18/9. சமூக ஏற்றத்தாழ்வு, குழந்தைத் தொழிலாளர்கள், ஊழல், ஆபாசம் என அனைத்தையும் உள்ளடக்கிய படம். ஒரு காமக் காதலால் ஒரு உன்னத காதல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதே இப்படத்தின் கதை.
கல்லூரி : பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2007இல் வெளியான திரைப்படம் கல்லூரி. இப்படம் தர்மபுரி பஸ் எரியும் சம்பவத்தையும், தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு நிஜ சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.