திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மரண ஹிட் கொடுத்து காணாமல்போன 8 இயக்குனர்கள்.. ஓப்பனிங் நல்லா தான் இருந்துச்சு, ஆனா பினிஷிங் சரி இல்ல

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் கட்டுரைகள் மூலம் சில சினிமா அனுபவங்களை பார்க்கிறோம். அந்த வகையில் இந்த தலைப்பின் கீழ், தமிழ் சினிமாவில் ஆர்ப்பாட்டமாக ஆரமித்து ஒன்றிரண்டு படங்கள் ஹிட் கொடுத்துவிட்டு சீக்கிரமே காணாமல் போன இயக்குனர்களை பார்க்கலாம்.

கரு. பழனியப்பன்: நடிகர், தொகுப்பாளர், இயக்குனர் என்று பன்முகத் தன்மை கொண்ட பழனியப்பன் அவர்கள் வசந்த் அவர்களது பள்ளியிலிருந்து வந்தவர். இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அவர்கள் தான் குரு. முதல் படம் பார்த்திபன் கனவு. சினேஹாவிற்கு இரண்டு வேடங்கள். நாயகன் ஶ்ரீகாந்த் மாடர்ன் சினேகாவை நினைத்து கிராமத்து சினேகாவை திருமண செய்து படும் இன்னல்கள் தான் படக்கதை. அடுத்து சதுரங்கம் என்ற படத்தை ஆரம்பித்தார். 9 வருடங்கள் கழித்து தான் வெளிவந்தது. படமும் ஃப்ளாப். இதற்கு இடையில் சிவப்பதிகாரம். பழிவாங்கும் கதை. எந்த புதுமையும் இல்லாத காரணத்தால் சீக்கிரம் திரையரங்கை விட்டு வெளியேறியது. அப்பறம் ஜன்னல் ஓரம், மந்திரபுண்ணகை போன்ற படங்களை இயக்கினார். ஒன்றும் தேரவில்லை. அதனால் தொகுப்பாளராகவும், திமுகவுக்கு பிரச்சாரம் செய்தும் சம்பாதிக்கிறார்.

அமீர் சுல்தான்: அமீர் அவர்கள் மூன்று வெற்றிகளை பதிவு செய்தார். மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத கதைகளை கொடுத்தார். பெரிய இயக்குனர் ஆவார் என்று எதிர் பார்த்த போது இவரும் நடிக்க ஆசை பட்டு சூடு வாங்கிக்கொண்டார். அடுத்து இவர் இயக்கிய ஆதி பகவான் ஜெயம் ரவியின் மார்கெட்டை குறைத்தது. அதன் பிறகு நடிகராக மட்டுமே இருக்கிறார். வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

கார்த்திக் சுப்புராஜ்: பிஸ்ஸா என்ற வித்தியாசமான படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் கார்த்திக். யாரும் எதிர்பாரா வண்ணம் திரைக்கதை அமைத்த காரணத்தால் பெரும் வெற்றி பெற்றது. அதனால் ஜிகர்தண்டா வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. அடுத்து இறைவி என்ற முழுமை பெறாத படைப்பை கொடுத்து முதல் தோல்வியை கண்டார். ஆனாலும் அவருக்கு ரஜினி என்னும் பந்தய குதிரை கிடைத்தது. அவரும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் பேட்ட படத்தை ரசித்து எடுத்தார். முதல் பாகம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது. பா.ரஞ்சித், கே.எஸ்.ரவிகுமார் போன்றோரின் படங்களால் துவண்டு போனவர்களுக்கு இந்த ரஜினி பிடித்திருந்தது. படம் ஹிட். ஆனால் அதன் பிறகு வெறும் சொதப்பல் தான். கடைசியாக இவர் இயக்கிய ஜகமே தந்திரம் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் நரேன்: துருவங்கள் 16, என்னும் எளிதில் யூகிக்க முடியாத கதையை கொடுத்தவர் கார்த்திக் நரேன். இவரும் கார்த்திக் சுப்புராஜ் போலவே குறும்படங்கள் மூலம் இயக்குனர் ஆனவர். ஆனால் நரேன் இந்த ஒரு படத்துடன் தனது திறமையை ஒளித்து வைத்துக்கொண்டார். இவர் இயக்கிய இரண்டாவது படம் வெளியிலேயே வரவில்லை. மாஃபியா, மாறன் போன்ற படங்கள் வெளியே வந்தன. அவ்வளவே. அதிலும் மாறன் திரைப்படம் மிக வெறுப்பை சம்பாதித்தது.

சசிகுமார்: இயக்குனர், நடிகர் என்று அறிமுகம் ஆனவர் சசிகுமார். இவர் இயக்கிய சுப்ரமணியபுரம் தமிழ் சினிமாவின் ஓர் மைல்கல். 80களின் மதுரை பின்னணியில் கதை அழகாக சொல்லப்பட்டது. படம் பெரிய வெற்றியை பதிவு செய்ய, தனது நண்பர் சமுத்திரக்கனியை வைத்து ஈசன் என்ற படத்தை எடுத்தார். படம் நன்றாக இருந்தபோதும், வேகம் இல்லாத திரைகதையாலும், நட்சத்திர போட்டியாலும் சரியாக போகவில்லை. இதன் பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமே தொடர்கிறார்.

சமுத்திரக்கனி: கேப்டன் விஜயாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த நெரஞ்ச மனசு படம் மூலம் இயக்குனர் ஆனார் சமுத்திரக்கனி. ஓரளவுக்கு போன இந்த படத்திற்கு பின்னர் அவர் அறியப்பட்டது நாடோடிகள் படம் மூலமாக. இந்த படத்தில் இருந்து கருத்துக்களாக சொல்லி ரசிகர்களை சோதித்தார். தொண்டன், சாட்டை என்று இயக்கம் நடிப்பு என்று எது செய்தாலும் கருத்து கந்தசாமியாகவே இருக்கிறார். வடசென்னை படத்தில் நல்லதொரு வில்லன் வேடம் செய்தார்.

கௌதம் மேனன்: ஆங்கில பட சாயல்களில் நகரத்து கதைகளை மட்டுமே இயக்கி பெயர் பெற்றவர் கௌதம். சில நல்ல படங்களை இயக்கியவர். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களை கொடுத்தார். வாரணம் 1000, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற தரமான கதைகளையும் கொடுத்தவர். ஆனாலும் இடை இடையே, பச்சைக்கிளி முத்துச்சரம், நீ தானே என் பொன்வசந்தம், நடுநிசி நாய்கள், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற ஃப்ளாப் களையும் கொடுத்தார். அவரது மேகிங் ஸ்டைல் நிறைய பேருக்கு பிடிக்கும்.

பேரரசு: பேரரசு என்றதும் அடுக்கு மொழி வசனங்களும், ஆட்டம் போடும் கேமரா கோணங்களும், மாஸ் மசாலா ஹீரோயிசம் தான் நினைவிற்கு வரும். திருப்பாச்சி படம் தவிர இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியே. இவரே வசனம், பாடல்கள் போன்றவற்றையும் எழுதுவார். ஊர்பெயர்களில் படப்பெயர் வைப்பது இவரது வாடிக்கை. இவர் இயக்கிய பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, தருமபுரி போன்ற படங்களை பார்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்.

Trending News