பார்ட் 2 படம் எடுத்தால் இப்படித்தான் எடுக்க வேண்டும் என அனைவருக்கும் நிரூபித்தது திரிஷ்யம் 2. மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தின் தொடர்ச்சியாக திரிஷ்யம் 2 படம் வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் செம சஸ்பென்ஸ் திரில்லராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது திரிஷ்யம் 2 திரைப்படம்.
காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தை கூட்டி, அதுவும் கடைசி 40 நிமிடத்தில் படம் எப்படி செல்கிறது என்பதையே யூகிக்க முடியாமல் செம சஸ்பெண்ஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட். திரிஷ்யம் படம் வெளியான போதே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது திரிஷ்யம் 2 படம் வெளியானதும் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார் பிரபல நடிகர் வெங்கடேஷ்.
திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தார். தற்போது திரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்கை விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வெங்கடேஷ் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அசுரன் படத்தின் ரீமேக்கான நாரப்பா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். தமிழில் ஒரு காலத்தில் விஜய் எப்படி தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாரோ அதேபோல் தற்போது வெங்கடேஷ் பெரும்பாலும் ரீமேக் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.