அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் அந்த படத்தின் கதை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை சொல்ல ஒரு நெட்டிசன் கூட்டமே உள்ளது. அவருடைய படங்களும் ஏறத்தாழ தமிழ்சினிமாவில் சூப்பர் ஹிட்டடித்த படங்களின் கதையாகத்தான் இருக்கும்.
இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படங்களின் கதைகள் தான். மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்திலிருந்து வந்ததுதான் ராஜா ராணி. அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் கதை எழுதிய சத்ரியன் படத்திலிருந்து வந்ததுதான் தெறி.
விஜய் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டலாக வெளியாகி பல வசூல் சாதனைகளை செய்த மெர்சல் திரைப்படம் கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து உருவாக்கப்பட்டது எனவும் கூறினர். ஆனால் இந்த படம் அபூர்வ சகோதரர்கள் போல் இல்லை என கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.
மேலும் கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படமும் ஷாருக்கான் ஏற்கனவே நடித்த சக்தே இந்தியா என்ற படத்திலிருந்து உருவப்பட்டது தான். இதை நாங்கள் சொல்லவில்லை. பலரும் பல யூடியூப் பேட்டிகளில் சொன்னதைத்தான் கூறுகிறோம்.
இந்நிலையில் அடுத்ததாக அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் பக்கா ஆக்ஷன் மசாலா படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் உளவுத்துறை அதிகாரியாகவும், அதேசமயம் கிரிமினல் வேடத்திலும் நடிக்க உள்ளாராம்.
இதைக் கேள்விப்பட்ட உடனேயே நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் அப்படி என்ன படம் வந்துள்ளது என தேடும்போதுதான் சிக்கியது விஜயகாந்தின் பேரரசு திரைப்படம். பேரரசு படத்தில் விஜயகாந்த் சிபிஐ அதிகாரியாகவும், அதேசமயம் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். என்ன பண்றது சார், இருக்கிறது ஏழு ராகம் தானே.