கிட்டத்தட்ட 40 வருட காலமாக தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்த படம் ரஜினியின் அருணாச்சலம், படையப்பா ரேஞ்சில் இருக்கும் என்கிறார்கள் அண்ணாத்த வட்டாரங்கள்.
ரஜினி சமீபகாலமாக தனக்கு தோதான தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு காரணம் அவருடைய சம்பள அளவுதான். ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதால் அதை யார் சரியாக கொடுப்பார்கள் என்பதை கணித்து அவர்களுக்கு மட்டும் பட வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினியின் பட வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கும் தயாரிப்பாளர்களை இன்னமும் கோலிவுட்டில் பார்க்க முடிகிறது. அந்த மாதிரி கிட்டத்தட்ட ரஜினி பட வாய்ப்பு தரமாட்டாரா என 36 வருடம் காத்திருந்தாராம் ஒரு தயாரிப்பாளர்.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம தமிழ் சினிமாக்களை உலக அளவில் எடுத்துச் செல்லும் தயாரிப்பாளர்களில் மிக முக்கியமானவரான கலைப்புலி எஸ் தாணு தான். ரஜினியின் ஆரம்ப காலகட்டங்களில் அவரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டாராம் கலைப்புலி எஸ் தாணு.
ஆனால் அது 36 வருடமாக கை கூடவில்லை. அப்படி நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக பா ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்தாராம் ரஜினிகாந்த். முதலில் புதுமுக இயக்குனர் என தயங்கிய தாணு பின்னர் அந்த படத்தை பார்த்துவிட்டு பெரிய அளவில் விளம்பரம் செய்து மாபெரும் வசூல் படமாக மாற்றினார்.
கபாலி படத்திற்கு விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதெல்லாம் ஞாபகத்தில் இருக்கலாம். மீண்டும் ரஜினி பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம் கலைப்புலி எஸ் தாணு. இதை அவரே ஒரு நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.