தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
விஜய் படம் என்றாலே தனி மவுசுதான். அதிலும் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அப்படத்தை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி விடுவார்கள். ஒவ்வொரு தடவையும் விஜய் படம் வெளிவரும் அன்று தியேட்டர்கள் அனைத்தும் திருவிழா போல காட்சியளிக்கும். அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவார்கள்.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளன. சமீபகாலமாக பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் தான் உள்ளனர். என்னதான் இருந்தாலும் தியேட்டரில் விசில் அடித்து ஆட்டம் பாட்டத்துடன் படம் பார்ப்பது போல் வருமா?

இந்நிலையில் தான் கடந்த பொங்கலன்று விஜய் நடித்த மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியானது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு தியேட்டர்கள் திறந்து இருந்த சமயம் அது. கொரோனா சமயத்திலும் தியேட்டரில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் என்றால் அது மாஸ்டர் தான்.
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து மிரட்டியிருப்பார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இப்படம் வெளியாகி இவ்வளவு மாதங்கள் கடந்த நிலையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 2021ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களில் மாஸ்டர் 45வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியளவில் தற்போது மாஸ்டர் தான் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.