பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சோனு சூட் தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் படங்களில் மட்டும் தான் வில்லன். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர்தான் ரியல் ஹீரோ. அப்படித்தான் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம் இவர் செய்த செயல்.
நடிகர் சோனுசூட், கொரோனா காலத்தில் நடைபயணமாக சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் தவித்த மாணவர்களை, தனி விமானம் அனுப்பி அழைத்து வந்து உதவி செய்தார்.
மேலும் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது என ஏராளமான உதவிகளை செய்துள்ளார். தனது சொத்துக்களை அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் வாங்கியே இத்தகைய உதவிகளை அவர் செய்ததாக கூறப்படுகிறது.
![sonu-sood-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2020/12/sonu-sood-cinemapettai.jpg)
இந்நிலையில், சோனுசூட்டை எம்.பி. ஆக்க முயற்சி நடந்ததாகவும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து சோனு சூட்டுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “சோனுசூட் செய்த சமூக நலப்பணிகளால் ஈர்க்கப்பட்ட ஒரு மாநில அரசு அவருக்கு ராஜ்ய சபை எம்.பி. சீட் வழங்க முன்வந்தது.
ஆனால் சோனுசூட் அந்த வாய்பை பணிவோடு நிராகரித்தார். எந்த அரசியல் அமைப்பிலும் சார்ந்து இருக்க விரும்பவில்லை. அரசியல் கட்சிகள் சாயல் இல்லாமல் தனது பணிகளை தொடர விரும்புகிறேன் என்று சொல்லி வேட்புமனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்” என கூறியுள்ளனர்.
தனது சொத்துக்களை அடமானம் வைத்து மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவி செய்து வருவது மட்டுமல்லாமல், தன்னைத் தேடிவந்த எம்.பி பதவியை வேண்டாம் என மறுத்த சோனு சூட்டை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.