தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் நடிகராக நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் ஜீவி பிரகாஷ் ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் படங்களில் நடித்தாலும் தொடர்ந்து இசையமைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஆஸ்கார் நாயகனாக திகழும் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எப்போது ஹீரோவாக போகிறார் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் முதல் திரைப்படத்திற்கே தேசிய விருது கிடைத்தது.
இதனை தொடர்ந்து இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழி படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் இசைப்புயல் என அழைக்கப்பட்டார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல பெரிய விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது தமிழில், கோப்ரா, பொன்னியின் செல்வன், அயலான், வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர் “நீங்கள் எப்போது ஹீரோவாக நடிப்பீர்கள்..?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் “நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா?” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த நகைச்சுவையான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.