விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதனைத் தொடர்ந்து ஆபீஸ் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
செம்பருத்தி தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. இத்தொடர் மூலம் கார்த்திக் ராஜுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். செம்பருத்தி தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்த சமயத்தில் திடீரென கார்த்திக் இத்தொடரில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று நடிக்கும் ஆசையில் செம்பருத்தி தொடரிலிருந்து விலகிய கார்த்திக் படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தான் படங்களில் நடிப்பதை யாரோ சிலர் தடுத்து வருவதாகவும், தன்னை வளரவிடாமல் தடுப்பதாகவும் கார்த்திக் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து யார் உதவியையும் எதிர்பார்க்காமல் தானே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கார்த்திக் தொடங்கினார். கே ஸ்டுடியோ என்ற அந்த நிறுவனம் மூலம் சில படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அதன்படி தற்போது அவர் தயாரித்து வரும் படத்திற்கு நாயகி தேவை என்று ஒரு விளம்பரத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகர்களுக்கும் வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்கள் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அந்த வகையில் நடிகர் கார்த்திக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் இருந்து விலகி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள கார்த்திக் தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.