பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படத்திற்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுப்பதற்கு பிரபல இணையதளமான நெட்ப்ளிக்ஸ் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிந்தி சினிமாவில் முன்னணி இயக்குனரான சஞ்சய்லீலா பன்சாலி வரலாற்றுப் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். இவர் இயக்குனர் மட்டுமின்றி இசையமைப்பாளர், கேமராமேன் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கங்குபாய் கதியாவாதி படம் வெளியாக உள்ளது. ஆலியா பட் லீடு ரோலில் நடிக்கும் இப்படத்தின் டீஸர் சில நாள்கள் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கங்குபாய் கதியாவாதி படத்தை தொடர்ந்து ஹீராமந்தி என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்குவதற்காக பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.
பிரமாண்டமாக தயாராக உள்ள இத்தொடரில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயாராக இருப்பதாக ஆலியா பட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், வெப் சீரிஸின் முதல் சீசனுக்காக மட்டும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ரூ.35 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இத்தொடர் குறித்து பேசிய சஞ்சய் லீலா பன்சாலி, ”இது ஒரு பிரமாண்டத் தொடராக வெளிவரும். இந்த தொடரை இயக்க ஆவலோடு இருக்கிறேன். உலகளாவிய பார்வையாளர்களை கொண்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹீராமந்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.