தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், பல்வேறு நாடுகளை வர்த்தக ரீதியாக அசைத்துப் பார்க்குமோ அல்லது வேறு சில பிரச்சினைகள் சர்வதேச அளவில் கிளம்புமோ என்று உலக நாடுகளே அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஆப்கானிய மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக தங்கள் உயிரையே பனையம் வைத்து வெளியேற முயற்சிக்கின்றனர். ஏனென்றால் தாலிபான்கள் வரும் நாட்களில் அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்துவார்கள். முக்கியமாக பெண்களும் சினிமா உள்ளிட்ட கலைஞர்களும் அதிகமாக பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சூழலில் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர். இவர்களில் குறிப்பாக ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
அந்தப் பதிவில், ‘இந்துத்துவ தீவிரவாதத்தை பொறுத்துக் கொண்டிருக்கும் நாம், ஏன் தாலிபான்களின் தீவிரவாதத்தை கண்டு அச்சப்படுகிறோம்!’ என்ற கருத்தை பதிவிட்டு தாலிபான்களையும் இந்துத்துவத்தையும் ஒற்றுமைப்படுத்தி பேசியுள்ளார்.
ஏற்கனவே ஸ்வரா, சமூக வலைதளங்களில் பல்வேறு காரசாரமான விவாதங்களை நடத்துவது வழக்கம் தான். அப்படித்தான் இப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இவருடைய இந்தப் பதிவிற்கு சிலர், ‘நீங்கள் ஏன் ஒரு மாதம் ஆப்கானிஸ்தானில் போய் இருந்துவிட்டு வந்து, அப்புறம் பேசலாமே! திரும்ப வந்தால்..’ எனவும், வேறு சிலர், ‘ஸ்வரா அவர்களின் தனிப்பட்ட கணக்கில் அவர் எப்படி வேணாலும் பதிவு செய்யலாம்,
நீங்கள் ஒன்றும் ஸ்வராவிற்கு வாக்களித்து அவரை பிரதமராக்கவில்லை, முடிந்தால் நீங்கள் வாக்களித்த பிரதமரை தாலிபானின் போக்குக்கு கண்டனம் தெரிவிக்க சொல்லுங்கள்’ என்றும் தங்களது கமெண்ட்டை காட்டமாக பதிவு செய்கின்றனர்.
மேலும் ஒரு சில ரசிகர்கள், ஸ்வராவின் ட்விட்டர் பதிவு குறித்து போலீசாரிடம் வழக்குப் பதிவு செய்த கடிதத்தை தங்களது ட்விட்டரில் போஸ்ட் செய்தும் வருகின்றனர்.