தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஆண்டுகள் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது இதயம் படம் தான். கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான இதயம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படத்திற்கு இணையான ஒரு காதல் படம் தமிழ் சினிமாவில் இல்லை.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் இதயம் படம் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ஹீரா நடித்திருந்தார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் படமான இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியது.
இதயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கதிர் இதனைத் தொடர்ந்து பல காதல் படங்களை வழங்கினார். அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் கதிர் மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருதலைக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இதயம் படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக நடிகர் முரளி நடித்திருப்பார். தன்னுடைய காதலை காதலியிடம் கூற தயங்கும் ஒரு சாதாரண இளைஞராக முரளி தன் நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல் தன்னுடன் பயிலும் சக மாணவன் தன்னை விரும்புவதை அறியாத ஒரு மருத்துவ மாணவியாக நடிகை ஹீரா ராஜகோபால் நடித்திருப்பார்.
ஒரு கட்டத்தில் காதலை சொல்லாமல் தேக்கி வைத்ததால் முரளியின் இதயத்தில் மருத்துவரீதியாக பிரச்சனை உண்டாகும். எனவே அவருக்கு அதிக அதிர்ச்சி அல்லது சந்தோஷம் தரக்கூடிய செய்திகளை சொல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இதனால் முரளியின் காதல் தெரிந்தும் அவரிடம் அதனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஹீராவின் நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது.
இப்படம் மூலம் பிரபலமான நடிகை ஹீரா இதனைத் தொடர்ந்து நீ பாதி நான் பாதி, சதி லீலாவதி, திருடா திருடா, காதல் கோட்டை, அவ்வைசண்முகி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தும் 1999 ஆம் ஆண்டு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு சென்று விட்டார். தற்போது வரை இவரை எந்த ஒரு படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான இதயம் படம் மூலமாக என்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் இருக்கும்.